மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 20 பிப் 2020

மணல் குவாரி: இடைக்காலத் தடை இல்லை!

மணல் குவாரி: இடைக்காலத் தடை இல்லை!

மணல் குவாரிகளை 6 மாதத்திற்குள் மூடும் தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை .

தமிழகத்தில் மணல் குவாரிகளை 6 மாதத்திற்குள் மூட வேண்டுமென்று, கடந்த நவம்பர் 29ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றக் மதுரை கிளை நீதிபதி மகாதேவன் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த தீர்ப்பை தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்றதோடு, இதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்தன. இதற்கு மாறாக, மணல் குவாரி தடை தீர்ப்புக்கு எதிராக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் சார்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது.

இன்று (டிசம்பர் 5) இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை , குவாரிகளை மூடும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என தெரிவித்தது. அதோடு, வரும் டிசம்பர் 8ஆம் தேதிக்கு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

குவாரிகளை மூடும் தீர்ப்புக்கு எதிராக, குறுகிய காலத்தில் மாவட்ட ஆட்சியர்கள் சார்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். இந்த விவகாரம் குறித்து, அவர் இன்று (டிசம்பர் 5) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

”இந்த நடவடிக்கை, தமிழகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழக ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லாததையே காட்டுகிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு ஒரே ஒரு காரணம் கூட இல்லாத நிலையில், நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அரசு மேல்முறையீடு செய்திருப்பதன் நோக்கம் புரியவில்லை. இதன் பின்னணியில் ஏதோ பேரம் நடந்திருப்பதை மட்டும் யூகிக்க முடிகிறது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் ஒக்கி புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவே நேரமின்றி தவித்துக் கொண்டிருக்கும்போது இவ்வளவு அவசரமாக மேல்முறையீடு செய்யும் சிந்தனை கூட அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆட்சியாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே அவர்கள் பெயரில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

புயல் நிவாரணப் பணிகள் முடிவடையாத நிலையிலும் அவசர, அவசரமாக மேல்முறையீடு செய்யுமாறு அரசு அழுத்தம் கொடுத்ததற்கு என்ன காரணம்? நிச்சயமாக மணல் தட்டுப்பாடு காரணமாக இருக்க முடியாது. தமிழகத்தில் தற்போது நிலவும் மணல் தட்டுப்பாடுக்கு நீதிமன்றத் தீர்ப்பு காரணம் இல்லை.

மணல் கொள்ளையும், அதனால் ஆளுங்கட்சியினருக்கு கிடைக்கும் வருமானமும் தடைப்பட்டு விடுமே என்ற கவலை தான் காரணமாக இருக்க முடியும். ஏனெனில் அரசு நிர்ணயித்த விலைப்படி ரூ.1600 மதிப்புள்ள ஒரு சரக்குந்து மணலை வெளிச்சந்தையில் ரூ.30,000 முதல் ரூ.36,000 வரை விலைவைத்து மணல் கொள்ளையர் விற்கின்றனர்.

இவ்வகையில் மட்டும் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 கோடி வரையிலும், கடந்த 15 ஆண்டுகளில் ரூ.4.50 லட்சம் கோடி அளவுக்கும் இழப்பு ஏற்படுகிறது. இதை இழக்க மனமில்லாமல் தான் மணல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஆட்சியாளர்கள் அவசர அவசரமாக மேல்முறையீடு செய்துள்ளனர். இது தான் உண்மை” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ். அதோடு, இந்த மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கிறார்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon