மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 25 ஜன 2020

இயல்பு நிலைக்குத் திரும்பும் வெங்காயம்!

இயல்பு நிலைக்குத் திரும்பும் வெங்காயம்!

தொடர் மழை மற்றும் குறைந்த வரத்து காரணமாக வெங்காய விநியோகம் வெகுவாகப் பாதிப்படைந்தது. இதன் காரணமாக விலையிலும் ஏற்றம் காணப்பட்டது. தற்போது விளைச்சல் முடிந்து சந்தைகளுக்கு வெங்காயத்தின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் விரைவில் விலை குறையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாகப் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ 80 முதல் 90 ரூபாய் வரையிலும், சின்ன வெங்காயம் 140 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. பொதுவாக டிசம்பர் மாதத்திலிருந்து வெங்காயம் வரத்து அதிகரிக்கத் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் வரத்து சந்தைக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் விரைவில் விலை குறையும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து வெங்காய சந்தையின் மொத்த விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், "வெங்காயம் வரத்து ஆந்திர மாநிலம் கர்நூல் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் அகமத் நகரில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முன்பு இங்குள்ள சந்தைகளில் ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பெரிய வெங்காயம், தற்போது ரூ.38ஆகச் சரிந்துவிட்டது. இனிவரும் நாட்களில் மொத்த சந்தைகளில் வெங்காய விலை கிலோ ரூ.32லிருந்து ரூ.30ஆக குறைய வாய்ப்புள்ளது.

பருவம் தப்பிப் பெய்த மழையால் வெங்காய சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்கள் மிகக் குறைந்த அளவே உற்பத்தி செய்ய முடிகிறது. தெலங்கானாவில் உள்ள ரிது பஜாருக்கு முதல் லோடாக 250 குவிண்டால் வெங்காயம் வந்துள்ளது. மற்றொரு 260 குவிண்டால் அடுத்த லோடு வெங்காயம் வந்துவிடும். எனவே ஜனவரியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25ஐ எட்டலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

மத்திய வேளாண் துறை செயலாளர் எஸ்.கே.பட்நாயக் கூறுகையில், ”வெங்காய சாகுபடி அதிகமாக இருக்கும் மகாராஷ்டிராவில் இன்னும் 15 முதல் 20 நாட்களில் வரத்து அதிகரித்து விலை குறைந்து விடும். இதுபோல் தக்காளி அறுவடையும் விரைவில் தொடங்கவுள்ளதால், இதன் விலையும் விரைவில் குறைந்துவிடும்'' என்றார்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon