மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

பாஜகவை மிஞ்சும் காங்கிரஸ்!

பாஜகவை மிஞ்சும் காங்கிரஸ்!

குஜராத் சட்டமன்றத் தேர்தலை இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில்... காங்கிரஸுக்கும் பாஜகவும் இப்போது சம நிலையில் இருப்பதாக புதிய கருத்துக் கணிப்பு வெளியாகியிருக்கிறது.

இரு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரத்தில் இறங்கியுள்ளன. பிரதமர் மோடியும், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் குஜராத்திலேயே முகாமிட்டு சூறாவளியாக சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை காங்கிரசை விட பாஜக ஒரு படி மேலே இருப்பதாக சில ஆரம்ப கட்டக் கருத்துக் கணிப்புகள் தகவல் வெளியிட்டன. ஆனபோதும் பாஜக மிகவும் எச்சரிக்கையாகவே காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. ராகுல் காந்தி குஜராத் வணிகர்களை சந்தித்த நிலையில் ஜிஎஸ்டியை குறைத்தது பாஜகவின் மத்திய அரசு. ராகுல் காந்தி குஜராத்தின் தலித் தலைவர்களோடு நெருக்கம் காட்டிய நிலையில்... மாட்டிறைச்சி தடை பற்றிய அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது மத்திய அரசு. இவ்வாறு பாஜகவின் சில செயல்பாடுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகி பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோக்நிதி - சிஎஸ்டிஎஸ் - ஏபிபி நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பு நேற்று (டிசம்பர் 4) வெளியானது. கடந்த நவம்பர் 23 முதல் நவம்பர் 30 வரை, மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளிலும் பரவலாக நடத்தப்பட்டிருக்கும் இந்த கருத்துக் கணிப்பின்படி..

’குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வாக்குவங்கி 59 %ல் இருந்து 43% ஆக குறைந்திருக்கிறது. அதேசமயம் 29 சதவீதமாக உள்ள காங்கிரஸின் வாக்குவங்கி 43 சதவீதமாக அதிகரிக்கும். பிரதமர் நரேந்திர மோடிக்கு இருந்து வந்த ஆதரவு குறைந்துள்ளது.

வர்த்தகர்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கு ஜி எஸ்டி காரணமாக பெருமளவு சரிந்துள்ளது. அவர்களிடையே காங்கிரஸின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. தாய்மார்கள் மத்தியில் 59 சதவீத அளவிற்கு பாஜவிற்கு ஆதரவு இருந்த நிலையில் அது தற்போது 44 சதவீதமாக குறைந்திருக்கிறது. பெண்களிடையே காங்கிரசுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.

மூலம் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 91 முதல் 99 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதேசமயம், காங்கிரஸ் 78ல் இருந்து 86 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது’’ என்று புதிய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இது பாஜகவுக்கு அதிர்ச்சியளித்துள்ள நிலையில், காங்கிரஸாரோ, ‘’எங்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. நாங்கள் குஜராத்தில் ஆட்சி அமைப்பது உறுதி. அதேநேரம் தினம் தினம் நாங்கள் மக்களைப் பார்த்து வருவதால் கருத்துக் கணிப்புகளை பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை’’ என்கிறார்கள்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon