மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

கலப்படம் இல்லை : நெஸ்லே நிறுவனம்!

கலப்படம் இல்லை : நெஸ்லே நிறுவனம்!

மேகி நுாடுல்சில், எந்தக் கலப்படமும் செய்யவில்லை.தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுகிறோம் என நெஸ்லே இந்தியா நிறுவனம் நேற்று (டிசம்பர் 4) தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தை சேர்ந்த நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்சில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாக ஈயம் மற்றும் மோனோ சோடியம் குளூட்டாமேட் என்ற அமினோ அமிலம் சேர்க்கப்பட்டிருப்பதாக உத்திர பிரதேசத்தில் தடை செய்யப்பட்டது. மேலும், தமிழகம், கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டது. பின்னர் 5 மாதங்களுக்குப் பிறகு நவம்பர் மாதம் மேகி மீதான தடை நீக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரப் பிரதேசம் மாநிலம் ஷாஜாகான்பூர் மாவட்டத்தில் இருந்து மேகி மாதிரிகள் ஆய்விற்காக அனுப்பப்பட்டன. மேகி நூடுல்ஸ் தர ஆய்வில் மீண்டும் தோல்வியடைந்ததால் இந்திய நீதிமன்றம் நவம்பர் 28ஆம் தேதி மேகிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. ஆய்வில், மேகியில் சாம்பல் அதிக அளவில் இருப்பது தெரிய வந்தது. இது மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நெஸ்லே இந்தியா நிறுவனம் மற்றும் மேகி விநியோகஸ்தர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி, நெஸ்லே நிறுவனம் 45 லட்சம் ரூபாயும், மூன்று விநியோகஸ்தர்கள் 15 லட்சம் ரூபாயும் மற்றும் இரண்டு விற்பனையாளர்கள் 11 லட்சம் ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில் நேற்று டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற,நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தலைவர், சுரேஷ் நாராயணன், “மேகி நுாடுல்சில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக எந்த ரசாயன பொருட்களும் சேர்க்கப்படவில்லை. எப்எஸ்எஸ்ஏஐ.,யின் (FSSAI) புதிய விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுகிறோம். ஷாஜாகான்பூர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு, எங்களுக்குக் கிடைத்துள்ளது. அது தொடர்பான, அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து, ஆலோசனை செய்து வருகிறோம். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இது தொடர்பாக, வேறு எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து, அதிகாரப்பூர்வமான அறிக்கை இன்னும் வரவில்லை என நெஸ்லே நிறுவனம் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon