தென் தமிழகத்தை திணறச் செய்த ஓகி புயல், மகாராஷ்டிரா, குஜராத் எல்லைப் பகுதிகளில், இன்று(டிசம்பர் 5) இரவு கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தென்மாவட்டங்கள், கேரளா மற்றும் லட்சத்தீவுகளைச் சூறையாடிய ஓகி புயல் நேற்று(டிசம்பர் 4) அரபிக் கடலில் மும்பையில் இருந்து 690 கி.மீ. தொலைவிலும் குஜராத்தின் சூரத் நகரில் இருந்து 870 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமேஷ் நேற்று கூறியதாவது, ஓகி புயல் படிப்படியாக வலு குறைந்து தெற்கு குஜராத், வடக்கு மகாராஷ்டிரா பகுதியில் இன்று இரவு கரையைக் கடக்கும். இதையொட்டி குஜராத், மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத்தில் பலத்த மழை பெய்யும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று ரமேஷ் தெரிவித்தார்.
"தற்போது அரபிக் கடலில் மையம்கொண்டுள்ள ஓகி புயல் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை நோக்கி நகர்வதால் மும்பையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் வடக்கு-வட மேற்குத் திசையில் குஜராத்தை நோக்கி மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்வதால், புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி, தெற்கு குஜராத்-வடக்கு மராட்டியம் இடையே உள்ள பகுதியில் சூரத் அருகே நள்ளிரவில் கரையைக் கடக்கும். இதனால், இன்று இரவு தெற்கு மகாராஷ்டிரா பகுதிகளில் கனமழை பெய்யும்” என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.