மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 13 டிச 2019

வட மாவட்டங்களை மிரட்டும் சாகர்!

வட மாவட்டங்களை மிரட்டும் சாகர்!

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் சாகர் புயலால் வட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், புயல் பாதிக்கும் மாவட்டங்களை முன்கூட்டியே கண்டறிந்து, புயல் தாக்கினாலும் பாதிப்பு இல்லை எனுமளவுக்கு சேதத் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென கோரியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

ஒக்கி புயலால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளான நிலையில் இருந்து, இன்னும் முழுமையாக மீளவில்லை. மீட்புப்பணிகளில் தமிழக அரசும் மத்திய அரசும் ஈடுபட்டுவரும் நிலையில், அடுத்ததாக வங்கக்கடலில் உருவாகியிருக்கும் சாகர் புயல் தமிழகத்தின் வடமாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயமிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க, போதிய முன்னெச்சரிக்கைப் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

”காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகத்தை நோக்கி நகருகிறது என்ற செய்தியே வட தமிழக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளில் மழையாலும் புயலாலும் பாதிக்கப்பட்டதை விட, அரசு எந்திரத்தின் அலட்சியத்தால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத பாதிப்புகள் தான் இதற்குக் காரணம்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் செய்த மழையால் ஏற்பட்ட கோர விளைவுகளின் பாதிப்புகளில் இருந்து அங்குள்ள மக்கள் இன்னும் மீளவில்லை. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இதேகாலத்தில் சென்னையை தாக்கிய வர்தா புயலால் சென்னையில் உள்ள மரங்களில் பெரும்பாலானவை வேருடன் வீழ்ந்தன. மக்களின் உடமைகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் இன்று வரை எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை.

எனவே, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை மீண்டும் புயல் தாக்கினால் அதன் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினமானதாக இருக்கும். புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களை தடுக்கும் வல்லமையை இயற்கை நமக்கு வழங்கவில்லை. எனினும், புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நம்மால் தவிர்க்கவோ, குறைக்கவோ முடியும்.

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை நிறுத்தப்பட்டிருக்கிறது. இவை வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், இவை மட்டுமே போதுமானவை அல்ல. புயலாலும், மழையாலும் மின் கம்பிகள் அறுந்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுத்தல், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தல், குடிசைப் பகுதிகளில் சேதம் ஏற்படாமல் தடுத்தல், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

புயல் தாக்கும் வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு கடமை உணர்வும், அர்ப்பணிப்பும் கொண்ட இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை முன்கூட்டியே அனுப்பி சேதத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தை புயல் தாக்கினாலும் அதனால் பாதிப்பு இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் ராமதாஸ்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon