மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 25 ஜன 2020

வேன் டிரைவர் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம்!

வேன் டிரைவர் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம்!

கோவையில் இருந்து (டிசம்பர் 02) கூடலூருக்கு சரக்கு வேன் புறப்பட்டது. குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை மரப்பாலம், காட்டேரி ஆகிய இடங்களில் நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துக்கொண்டிருந்தனர். வேனை சுனில்குமார் என்பவர் ஓட்டி வந்தார். அப்பொழுது அங்கு வந்த வேனை வழிமறித்து சோதனை செய்தனர் காவல்துறையினர்.

வேன் டிரைவரிடம் அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்தும், ஹெல்மெட் அணியவில்லை என்று குன்னூர் வெலிங்டன் காவல்துறையினர் கூறி ரூ.200 அபராதம் விதித்து வசூல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

அபராத ரசீதை பார்த்த வேன் டிரைவர் ஹெல்மெட் அணியவில்லை என்று விதித்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்..

இது குறித்து வேன் டிரைவர் கூறும்போது, நான் கோவையில் இருந்து கூடலூருக்கு கடந்த (டிசம்பர், 02) சரக்கு வேனில் புறப்பட்டேன். வரும் வழியில் பல இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தினர். உரிய ஆவணங்கள் இருந்தாலும் நீண்டநேரம் காக்க வைத்து அனுப்புகிறார்கள். அதில் ஏதாவது ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து பணம் வசூல் செய்வதிலேயே குறியாக உள்ளனர். பெரும்பாலான சுற்றுலா வாகனங்கள், லாரிகளுக்கு ரசீது வழங்காமல் அபராதம் வசூல் செய்துள்ளனர் என்றார். ஹெல்மெட் அபராதம் விதிக்கப்பட்ட ரசீதை சமூக வலை தளங்களில் வேன் டிரைவர் வெளியிட்டுள்ளார். அது தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து நீலகிரி மாவட்ட கூடுதல் காவல்துறையின் கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்தியாளர்களுக்கு கூறுகையில், வேன் டிரைவர் ஹெல்மெட் அணியவில்லை என்று அபராதம் விதித்து தவறான முறையில் வசூல் செய்தது குறித்து குன்னூர் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் வசூல் செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதேப்போன்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, திருச்சியில் கார் ஓட்டும்போது அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் தலைக்கவசம் ஏன் அணியவில்லை என்று கூறி அபராதம் விதித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon