மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 20 பிப் 2020

ஆம் ஆத்மி முயற்சி பலிக்காது!

ஆம் ஆத்மி முயற்சி பலிக்காது!

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குமார் விஸ்வாஸ், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் போன்று கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் கட்சிக்கு கொண்டுவரும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிவித்திருந்தார். “அப்படியொரு விஷயம் நடக்க வாய்ப்பேயில்லை” என்று தெரிவித்திருக்கின்றனர் பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ்.

ஆம் ஆத்மி கட்சி தொடங்கி 5 ஆண்டுகள் பூர்த்தியானதையொட்டி, சில நாட்களுக்கு முன்பு விழா நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த குமார் விஸ்வாஸ். ஆரம்பகாலத்தில் வலுவாக இருந்த ஆம் ஆத்மியை மீண்டும் கட்டமைக்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

”கட்சியில் இருந்து விலகியவர்கள், தனிக்கட்சி தொடங்கியவர்கள், ஆம் ஆத்மியோடு முரண்பட்டு சமூகச்செயற்பாட்டாளர்களாக இருப்பவர்கள் மீண்டும் ஆம் ஆத்மி பாதைக்கு திரும்பலாம்” என்றிருந்தார். குறிப்பாக பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் போன்றவர்களை இழுக்கவே, குமார் விஸ்வாஸ் இவ்வாறு கூறியதாகத் தகவல்கள் வெளியானது. இவர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமானவர்.

ஆனால், குமார் விஸ்வாஸின் வார்த்தைகளுக்கு பூஷனும் யாதவும் கூட்டாகச் சேர்ந்து மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். ”ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு துரோகம் செய்தவர்களோடு மீண்டும் இணையும் வாய்ப்பே இல்லை. அப்படி எந்த பேச்சுவார்தைகளும் நடக்கவில்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் பிரசாந்த் பூஷண்.

இந்த தகவலைக் கேள்விப்பட்டு ஆச்சர்யமைடந்ததாகக் குறிப்பிட்டிருக்கும் யோகேந்திர யாதவ், ”இது ஒரு ரகசியம்தான், நாங்கள் இருவருமே இதுபற்றிக் கேள்விப்படவில்லை. அப்படியொரு விஷயம் நடக்க வாய்ப்பேயில்லை. ஆம் ஆத்மியின் முயற்சி பலிக்காது” என்று ஒரே போடாக போட்டிருக்கிறார்.

கடந்த 2015ம் ஆண்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் ஒரு சர்வாதிகாரியைப் போல உள்ளது என்று கூறி பிரசாந்த் பூஷணும் யோகேந்திர யாதவும் போர்க்கொடி உயர்த்தினர்; ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் வெளியேறினர். அதன்பிறகு, கடந்த 2016ம் ஆண்டு இருவரும் இணைந்து ‘ஸ்வராஜ் இந்தியா’ என்ற அமைப்பைத் தொடங்கி செயல்பட்டு வருகின்றனர்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon