மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 21 பிப் 2020

மணல் குவாரி விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

மணல் குவாரி விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

மணல் குவாரிகளை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டுமென்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலைப் பயன்படுத்த அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில், மதுரை உயர் நீதிமன்றக் கிளை கடந்த வாரம் தீர்ப்பளித்தது. ஆறு மாதங்களுக்குள் தமிழகமெங்கும் இருக்கும் மணல் குவாரிகளை மூட வேண்டுமென்றும், புதிய குவாரிகள் திறக்கத் தடை விதித்தும், வெளிநாட்டிலிருந்து மணலை இறக்குமதி செய்யலாம் என்றும் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிபதி மகாதேவன் தெரிவித்த இந்த உத்தரவை, தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்றன. சூழலியல் சார்ந்து இந்தத் தீர்ப்பு அமைந்திருப்பதாக பாராட்டுகள் தெரிவித்தன. அதேநேரத்தில், மணல் விற்பனையில் மிகப்பெரிய அளவில் ஊழல் நிகழ்ந்திருப்பதாகவும் குற்றம் சுமத்தின. ஆனால், ஆன்லைன் மூலமாக மணல் விற்பனை நடத்தியதால் எந்த முறைகேடும் நடக்கவில்லை என இதற்குப் பதில் தெரிவித்திருந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்த நிலையில், மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவை எதிர்த்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இது விசாரணைக்கு வரவுள்ளது.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மணலில் என்ன தனிமங்கள் கலந்திருக்கின்றன, அந்த மணலின் தரம் என்ன என்று ஆய்வதில் சந்தேகங்கள் இருப்பதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டில் இவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. முன்னதாக, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்கள் இதுவரை அரசால் திருப்பி அளிக்கப்படவில்லை. அதோடு, துறைமுக வளாகத்திலிருந்து மணல் எடுக்கவும் அனுமதிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

திங்கள், 4 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon