மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

விவேக் நடத்திய கல்யாண ஓடை கிடாவெட்டு!

விவேக் நடத்திய கல்யாண ஓடை கிடாவெட்டு!

ஒரே நேரத்தில் சசிகலாவின் குடும்பத்தைக் குறிவைத்து 187 இடங்களில் சுமார் இரண்டாயிரம் வருமான வரி அதிகாரிகள் நடத்திய மெகா ரெய்டு முடிந்து சில தினங்களே ஆகும் நிலையில், இந்த ரெய்டின் மைய டார்க்கெட்டாகக் கருதப்பட்ட விவேக் முதன்முறையாக தஞ்சை, பட்டுக்கோட்டை பகுதிகளுக்குச் சென்றுவந்திருக்கிறார்.

அதுவும் நேற்று (டிசம்பர் 4) தனது மாமனார் ஊரான கல்யாண ஓடையில் இருக்கும் ஆதியப்பர் கோயிலுக்குச் சென்று கிடாவெட்டி வழிபாடு நடத்தியிருக்கிறார் விவேக்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை விவேக் சென்னையிலிருந்து தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் சகிதம் காரில் புறப்பட்டு, மதியம் பட்டுக்கோட்டையை அடைந்தார். பட்டுக்கோட்டையில் விவேக்கின் நண்பரும், தினகரனின் ஆதரவாளருமான பாப்பநாடு சிவா பலத்த வரவேற்பு அளித்து தன்னுடைய சொகுசு வீட்டில் விவேக் குடும்பத்தினரைத் தங்க த்து மறுநாள் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒன்றியத்தில் இருக்கும் கல்யாண ஓடைக்கு அழைத்துச் சென்றார். கல்யாண ஓடை விவேக்கின் மாமனார் பாஸ்கரனின் சொந்த ஊராகும்.

இந்த ஊரில் இருக்கும் ஆதியப்பர் கோயில்தான் விவேக்கின் மாமனார் குடும்பத்தின் குலதெய்வம். ஆதியப்பர் கோயிலில் அய்யனார், காளியம்மன் ஆகிய சந்நிதிகள் இருக்கின்றன. சுற்று வட்டாரத்தில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாகக் கருதப்படும் இந்தக் கோயிலுக்கு நேற்று மதியம் விவேக் குடும்பத்தோடு வந்தார்.

“இந்த அய்யனார்கிட்ட எதைக் கேட்டாலும் கொடுப்பாரு. சுத்துப்பட்டுல பல குடும்பங்களுக்கு இவருதான் குல தெய்வம். அப்படிதான் விவேக் தம்பியோட மாமனாருக்கும் குலதெய்வம். விவேக் வீட்ல ரெய்டு நடந்தப்ப தன் மகள் கதறுன கதறலைப் பார்த்ததுலேர்ந்தே அவருக்கு மனசு சரியில்ல.

சொந்த ஊருக்கு வந்தவர் குலதெய்வக் கோயில் பூசாரிக்கிட்ட வந்து கேட்டிருக்காரு. அப்ப பூசாரி, ‘உங்கப் பொண்ணு அந்த வீட்டுக்குப் போனாலும்... நீங்க பொண்ணு, மாப்பிள்ளையெல்லாம் கூட்டி அய்யனாருக்கு ஒரு பூஜை போடுங்க. பிரச்னையெல்லாம் சரியாயிடும்’னு சொல்லியிருக்காரு.

அதுக்குப் பிறகு விவேக்கைச் சம்மதிக்க வெச்சு அவங்க மாமனார்தான் கூட்டி வந்திருக்காரு. குடும்பத்தோட வந்த விவேக் அய்யனாரைக் கும்பிட்டு பூசை நடத்தினாரு. பரிவட்டம் கட்டி மரியாதை செஞ்சாங்க. அஞ்சு கிடா வெட்டினாங்க. ஊருக்குச் சாப்பாடு போட்டாங்க. உடனே கிளம்பிப் போயிட்டாருங்க” என்று முடித்தனர் பட்டுக்கோட்டை வட்டாரத்தினர்.

விவேக் வருகையைப் பற்றி அறிந்ததும் தினகரன் ஆதரவாளர்கள் பலரும் இந்த பூஜை நடத்துவதற்கான உதவிகளைச் செய்திருக்கிறார்கள். இதில் மேலும் சுவாரஸ்யம் என்னவென்றால்... பதவியில் இருப்பதால் இப்போது எடப்பாடி அணியில் இருக்கும் பலரும்கூட விவேக்கை வந்து பார்த்து, ‘நல்லா இருக்கீங்களா தம்பி... நாங்க என்னிக்கும் நம்ம குடும்பத்துப் பக்கம்தான். ஒண்ணும் கவலைப்படாதீங்க’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

கிடாவெட்டுக்கான எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்த அதிமுக நிர்வாகிகள், இப்போது எடப்பாடி அணியில் இருப்பதால் போட்டோவை மட்டும் கவனமாகத் தவிர்த்துவிட்டார்கள்.

அய்யனாரிடம் வேண்டிக்கொண்டு சென்னைக்குப் புறப்பட்டிருக்கிறார் விவேக். போகும்போது, ‘இந்த குலதெய்வக் கோயில் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு சிறையிலிருக்கும் சசிகலாவுக்கும், தன் அம்மா இளவரசிக்கும் கொடுக்கணும்’ என்று சொல்லிச் சென்றாராம் விவேக்.

இதன் பிறகு நேற்று மாலை விவேக் வந்துபோனது பற்றியும் கிடாவெட்டு பற்றியும் கல்யாண ஓடைக்காரர்களிடம் முழுவதுமாக விசாரித்திருக்கிறார் இப்போது எடப்பாடி அணியில் இருக்கும் வைத்திலிங்கம்.

- ஆரா

திங்கள், 4 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon