மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 21 ஜன 2020

அஞ்சலி: எம்.எஸ் (எ) எம்.சிவசுப்ரமணியம்: பிடிவாதமும் அர்ப்பணிப்பும்!

அஞ்சலி: எம்.எஸ் (எ) எம்.சிவசுப்ரமணியம்: பிடிவாதமும் அர்ப்பணிப்பும்!

கே.என்.செந்தில்

சுந்தர ராமசாமியைச் சந்திக்கச் சென்ற 2002-03இல் எம்.எஸ்ஸுடன் அறிமுகம் ஏற்பட்டது. காலையிலோ, மாலையிலோ அங்கு வந்துவிடுவார் என்று பின்னர் அறிந்தேன். குறுக்கும் நெடுக்கமாக நடந்து கொண்டிருந்தவரைக் கண்டு சு.ராவிடம், “இவரு யாரு சார்?” என்று கேட்டேன். மென்மையாகச் சிரித்தபடி அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த வயதுக்கேயுரிய வெகுளித்தனத்துடன் “எங்கிருந்து வர்றாரு..?” என்றேன். “இங்க பக்கத்துல திருப்பதிசாரம்னு ஊர். அங்க ஒரு நல்ல லைப்ரரி இருந்தது. நாம எந்தப் புத்தகம் கேட்டாலும் எடுத்துக்கொடுக்கற அளவுக்கு அதைப் பத்தி தெரிஞ்ச லைப்ரரியன்கள் இருந்தாங்க...” என சு.ரா சொல்லிக்கொண்டிருக்கும்போதே தன் ட்ரேட் மார்க் புன்னகையை உதிர்த்தபடியே நகர்ந்து புத்தகத்துக்கு ஃபுரூப் பார்க்கத் தொடங்கினார்.

ஐம்பதாண்டு கால நீண்ட நட்பு அவர்களுடையது. அவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் வாழ்ந்த இவ்வளவு ஆண்டுகளில் மிக அதிக நேரத்தைப் புத்தகங்களுக்கு மெய்ப்பு திருத்துவதிலேயே செலவிட்டிருப்பார் என்று தோன்றுகிறது. அதை ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் செய்வதை நேரில் கண்டிருக்கிறேன்.

எம்.எஸ்ஸின் ஆளுமை

இவ்வளவு நூல்களின் செம்மையாக்கத்தில் அவரும் ஒரு காரணியாக இருந்தாலும் இலக்கிய அப்பிராயங்களை வெளிப்படையாகச் சொல்லிக் கேட்டதில்லை. சரியில்லை என்பதற்கும், நன்றாக வந்திருக்கிறது என்பதற்கும் மாற்றமேயில்லாத அதே சிரிப்பைத்தான் பதிலாகத் தருவார். அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு ஒருவேளை அந்தச் சிரிப்பைப் பிரித்துப் பார்த்து பொருள்கொள்ள முடியலாம். அவரைக் காணும்தோறும் முதலில் கிட்டுவது பற்கள் தெரியாமல் உதடு விரித்த அப்புன்னகையே. மெய்ப்பு பார்த்தலும் பிரதி மேம்படுத்தலும் அனைத்திலும் முக்கியமாக மொழியாக்கமுமே அவரது ஆளுமையின் அடையாளங்கள். மூலத்துக்கும் தமிழுக்கும் ஊறு செய்யாத மிகக் குறைந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர். அவரது தோற்றத்தை வைத்து அவரது வயதைக் கணிப்பது வெகு சிரமம்.

என் முதல் சிறுகதைத் தொகுப்பை (இரவுக்காட்சி) அவர்தான் மெய்ப்பு நோக்கினார். அதற்காக நாகர்கோவிலுக்கு 2009இல் சென்றிருந்தபோது காலச்சுவடு அலுவலகத்தில் வைத்து அவர் குறித்து வைத்திருந்த பகுதிகளை இருவரும் சரிபார்த்தோம். அவர் வழங்கும் ஆலோசனைகள் மென்மையானவை. ஆனால், தட்ட முடியாதவை.

எம்.எஸ். மதியம்தான் வருவார் என்று சொன்னார்கள். பேண்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் விட்டபடி அவர் உள்ளே நுழைந்ததும் DTP பிரிவில் பணிபுரியும் பெண்களிடமிருந்து கூக்குரல்களும் சிரிப்புகளும் எழுந்தன. தோழிகளும் தோழனும் போல கிண்டல்கள். அவர்களுடன் சரிக்குச் சரியாக நின்று வாயாடினார். சிலருக்குச் செல்ல அடிகளும் கிடைத்தன. அவர் கைரேகை நிபுணர் என ஒருவர் சொல்ல சட்டென எம்.எஸ் ஒவ்வொருவரின் கையையும் பிடித்து நடுங்கும் குரலால் பலன்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

ஆச்சர்யத்துடன் “கைரேகை பாப்பீங்களா..?” என்று கேட்டேன்.

அதே சிரிப்பு. பக்கத்தில் பாம்பு என அலறினாலும் அப்படியேதான் சிரித்துக்கொண்டிருப்பார் என்று தோன்றியது.

“இவருக்கு பாத்துச் சொல்லுங்க..” என வெடித்துச் சிரித்தபடி சத்தமிட்டுச் சொன்ன ஒரு பெண்ணின் குரலுக்குப் பணிந்து என்னருகில் வந்தார். விவரமின்றி இடது கையைக் கொடுத்தேன். தவிர்த்துவிட்டு வலது கையைப் பிடித்து விரித்து தடித்த கண்ணாடிக்குள் உருண்ட பெரிய கண்களை மேலும் அகலத் திறந்தார். சட்டென்று பவர் கட் ஆனது. அப்போது நான் சொன்ன கமென்ட்டைக் கேட்டுச் சிரித்த போதுதான் அவருக்குச் சீரான வரிசையில் பற்கள் இருப்பதை முதன்முதலில் கண்டேன். பிறகு அவர் பலன்களைச் சொன்னார். அவற்றின் மேல் ஈடுபாடு இல்லாததால் அவர் என்ன சொன்னார் என்பதெல்லாம் நினைவில் இல்லை.

எம்.எஸ்ஸின் பங்களிப்பு

பல அயல் மொழி இலக்கியங்களை அவர் மொழிபெயர்த்திருந்தாலும் அதன் முன்னுரைகளில் பெரிதாக ஏதும் சொன்னதில்லை. ஆனால் ‘அமைதியான ஒரு மாலைப் பொழுது’ மொழிபெயர்ப்பு நூலுக்கு நாஞ்சில் நாடன் எழுதிய முன்னுரையும் ‘விழுந்து கொண்டிருக்கும் பெண்’ மொழியாக்கத் தொகுதிக்கு ஜெயமோகன் எழுதிய முன்னுரையும் அவரது பங்களிப்புகளைப் புடம்போட்டு வெளியே காட்டுபவை என உறுதிபடச் சொல்ல முடியும்.

சிற்றிதழ்களிலேயே அவரது மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. ஆங்கிலம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலிருந்து இவர் மொழிபெயர்த்த கதைகள், கட்டுரைகள் காலச்சுவடு இதழில் வெளியாயின. பிரதியை மேம்படுத்துபவராக, மெய்ப்பு நோக்காளராக மட்டுமே பலரும் அறிந்திருந்த எம்.எஸ்.ஸின் வேறொரு பரிமாணம் இதனால் பரவலாகத் தெரியவந்தது. பிறகு தொடர்ச்சியாக காலச்சுவடு, புனைகளம், சொல் புதிது, புது எழுத்து, கபாடபுரம் எனப் பல இதழ்களுக்கும் அவர் பங்களித்தார். அம்பைகொண்டுவந்த ‘பயணப்படாத பாதைகள்’ போன்ற தொகுப்பு நூல்களிலும் அவரது மொழிபெயர்ப்பு உண்டு.

ஆனால், இதற்கெல்லாம் அவர் என்ன பெற்றுக்கொண்டார் என்பது பற்றி ஏதும் தெரியாது. சிற்றிதழ்கள் வெளிவரும் சூழ்நிலையை அவர் பல்லாண்டு காலம் அறிந்திருந்ததால் இதுகுறித்தெல்லாம் அக்கறையோ, ஆர்வமோ காட்டவில்லை என நினைக்கிறேன். அப்படி ஏதும் அவருக்குக் கிட்டியிருப்பனும் அவர் செய்த பணிக்குச் சொற்பக் கூலியாகவே அதுஇருந்திருக்கும். நேர் அறிமுகமோ, பழக்கமோ இல்லாத ஆட்களுக்குக்கூட அவர் வேலை செய்து தந்திருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் பாதரசம் வெளியீடாக ‘அன்டன்செகாவ் கதைகள்’ நூல் வந்தது. நூல் வெளியான பின்பே அதன் பதிப்பாளர் சரோலமாவைப் பார்த்தேன் என சென்னை புத்தகக் காட்சியில் அவரைக் கண்டபோது சொன்னார்.

மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் கணிசமான ஆக்கங்களை (புனைவுகள், அபுனைவுகள், சுயசரிதைகள்) தமிழுக்குப் பெயர்த்திருக்கிறார். அவர் பெயர் இருந்தால் தயக்கமேதுமின்றி அந்த நூலை வாங்கலாம் என நம்பிக்கையை அளிக்கக்கூடிய சிறந்த மொழிபெயர்ப்பாளர் அவர்.

சக்கரியா (‘யாருக்குத் தெரியும்’), பெர்னான்டோ ஸோரண்டினோ (‘ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை’) என இருவருக்கும் தனி மொழிபெயர்ப்புத் தொகுப்புகளை முதன்முதலில் வெளியிட்டவர் எம்.எஸ். ச.து.சு. யோகியாரால் மொழிபெயர்க்கப்பட்டு நெடுநாள் ஆகியிருந்த ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’ நூலுக்கு நவீன மொழியில் அமைந்த மொழியாக்கம் எம்.எஸ். செய்ததே. பிறகு தன் நண்பர்களின் மொழிபெயர்ப்பு நூலிலும் அவரது பங்களிப்பு சிறிதளவேனும் இருந்திருக்கிறது. சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த உலகக் கவிதைகளின் தொகுப்பான ‘தொலைவிலிருக்கும் கவிதைகள்’ நூலிலும் எம்.எஸ்ஸின் கை உள்ளது.

என் தனிப்பட்ட விருப்பத்தில் ’காலச்சுவடி’யில் வந்த என்.எஸ். மாதவனின் ‘ஹிக்விக்டா’ கதை, ‘புனைகள’த்தில் வந்த ஜுலியோ கொர்த்தஸாரின் ‘தெற்கு நெடுஞ்சாலை’, ‘சொல்புதி’தில் வந்த அன்னி ஃப்ருல்க்ஸின் ‘பாதி தோலிருந்த காட்டு மாடு’ ஆகியவை மொழிபெயர்ப்பின் தரத்துக்காகவும் கதைகளின் சொல்முறை காரணமாகவும் மிகப் பிடித்தவை. அவர் திறனுக்கான சான்றாக நிற்பவை.

எம்.எஸ்ஸின் நட்பு

‘கபாடபுரம்’ இலக்கிய இணைய இதழை தொடங்கியபோது அதில் அவரது மொழிபெயர்ப்பு வர வேண்டும் என மிகவும் விரும்பினேன். ‘அவராலே முடியறதில்லை, கேட்டுப் பாருங்க’ என சுகுமாரன் அருகிலிருந்த எம்.எஸ்ஸிடம் போனைக் கொடுத்தார். சுமார் ஐந்து நிமிடங்கள் பேசினேன். சத்தமாகப் பேச வேண்டியிருந்தது. செவித்திறன் குறைந்திருந்தது. மொழிபெயர்த்துத் தர ஒப்புக்கொண்டார். திரும்ப சுகுமாரன் அழைத்து ‘என்னய்யா சொக்குபொடி போட்டீங்க... ஒப்புக்கிட்டாரு..!’ என்றார். சுகுமாரன் தேர்வு செய்து தந்த கதையையே எம்.எஸ். மொழிபெயர்த்துத் தந்தார். அது கபாடபுரம் இரண்டாம் இதழில் (தென் ஆப்பிரிக்க எழுத்தாளரான வில்லியம் ஊஸ்துய்ஸெனின் ‘லாட்டரிச் சீட்டு’ என்னும் நெடுங்கதை) வந்தது.

அந்த நாள்களில் அருகில் இருப்பவர்கள் விலகி ஓடும் அளவு சத்தமாக எம்.எஸ்ஸிடம் தொடர்ந்து பேசியிருக்கிறேன். பல தடவை போன் செய்தாலும் எடுக்க ஆளின்றி அலறிக்கொண்டிருக்கும். அவராக அழைக்கும்போது விஷயத்தைச் சொல்லி புரியவைக்க மேலும் சில நிமிடங்கள் பிடிக்கும். ஞாபக மறதியும் கண் பார்வையில் தள்ளாட்டமும் இருப்பதாக அறிந்தேன். ஒவ்வொரு முறை அழைக்கும்போதும் விளக்கிச் சொல்லத் தயங்கியதில்லை. இதழ் வெளியானதும் அவரை அழைத்து, தகவலைப் பகிர்ந்து நன்றியை உரத்த குரலில் சொன்னபோது புரிந்துகொண்டு, “பாக்கறேன் பாக்கறேன்..” எனச் சொல்லி போனை வைத்தார். இப்போது சிரித்திருக்க முடியாது என நினைத்துக்கொண்டேன். வயோதிகத்தின் இயலாமை அது.

இயலாதவரைத் தொந்தரவு செய்கிறோமோ என்றெண்ணி ஒருகட்டத்தில் “சார்... வேணாம். பாத்துக்கலாம்... ஒங்க ஹெல்த்தை பாருங்க..” என்ற குரலை புரிந்துகொண்ட பிறகு “சீக்கிரம் அனுப்பிடுவேன்” என்பதே அவரது மறுமொழியாக இருந்தது. அதுபோலவே அனுப்பியதும் அழைத்து, “பாத்துட்டு சொல்லுங்கோ” என்றார். “ரொம்ப நல்ல வந்திருக்கு... ஆனா மூல ஆசிரியரோட அறிமுகக் குறிப்பு இல்லாம இருக்கு. பரவால்லை சார். நான் பாத்துக்கறேன்...” என்றேன். உடனடியாக மறுத்து, அதைத் தானே செய்து அனுப்புவேன் எனச் சொன்னார். அப்படியே அனுப்பவும் செய்தார்.

இந்தப் பிடிவாதமும் அர்ப்பணிப்பும் முழுமையும் அந்தக் காலகட்ட ஆட்களுக்கே உரியது என நினைத்துக்கொண்டேன்.

எம்.எஸ்ஸுக்கு இதயபூர்வமான அஞ்சலி.

(கட்டுரையாளர் கே.என்.செந்தில்... சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகளை எழுதிவருபவர். கபாடபுரம் என்னும் இணைய இதழின் ஆசிரியர். அரூப நெருப்பு, விழித்திருப்பவனின் கனவு ஆகிய நூல்களின் ஆசிரியர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

திங்கள், 11 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon