மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 20 பிப் 2020

அரை நூற்றாண்டு சர்ச்சை: விண்வெளித் திரைப்படம் எது?

அரை நூற்றாண்டு சர்ச்சை: விண்வெளித் திரைப்படம் எது?

எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா எடுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் அவர் நடித்து அரை நூற்றாண்டு கண்ட திரைப்படம் பெரிய சர்ச்சைகளைக் கிளப்பிவருகிறது.

இயக்குநர் காசிலிங்கம் இயக்கத்தில் உருவான ‘கலை அரசி’ திரைப்படம் இப்போது எங்கெங்கிலும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. காரணம், இதுதான் தமிழின் முதல் ‘ஸ்பேஸ்’ திரைப்படம் என்கின்றனர் நெட்டிசன்கள். இல்லை என எதிர்க்கிறார்கள் ‘டிக் டிக் டிக்’ திரைப்படக் குழுவினர்.

டிக் டிக் டிக் திரைப்படம் நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கிறது. இந்தியாவின் முதல் விண்வெளித் திரைப்படம் என்று இந்தப் படத்தைப் படக்குழு புரமோட் செய்தபோது தொடங்கிய பிரச்னை இப்போது வரையிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழிலேயே எம்.ஜி.ஆர் - பானுமதி நடிப்பில் அற்புதமான விண்வெளி திரைப்படம் உருவாகியிருக்கிறது என்று நெட்டிசன்கள் சட்டையைப் பிடித்து வருகின்றனர். இதற்குப் பதிலளித்துள்ள படத்தின் எடிட்டர் பிரதீப்.இ.ராகவ் கலை அரசி விண்வெளி திரைப்படம் கிடையாது. விண்வெளி காட்சிகள் இருப்பதால் மட்டும் ஒரு திரைப்படம் அப்படியான பெயரைப் பெறாது. கேலக்ஸிக்களிடையே ஓடும் படமாக இருந்தாலும் கார்டியன் ஆஃப் தி கேலக்ஸி திரைப்படம் ஒரு சைண்டிஃபிக் த்ரில்லர் படம் மட்டுமே என்று எளிதாக விளக்கியிருக்கிறார் பிரதீப். இது உண்மையா?

படம்: கலை அரசி படம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் 1963இல் வெளியிட்ட பத்திரிகை செய்தி

ஒரு விண்வெளி திரைப்படம் என்பது படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் விண்வெளியில் நடைபெறுவதாகக் கொண்டிருக்க வேண்டும் என்கிறது மோஷன் பிக்சர்ஸ் அகாடமி. அதாவது, கலை அரசி திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பது போல பூமியிலிருந்து ஏலியன்களால் தூக்கிச்செல்லப்பட்ட பானுமதியை மீட்டுக் கொண்டுவருவதற்காகப் பறக்கும் தட்டுக்களைப் பயன்படுத்தி வேற்று கிரகத்துக்குச் சென்று திரும்பாமல், டிக் டிக் டிக் திரைப்படத்தில் இடம்பெறுவதுபோல, படத்தின் பெரும்பான்மை காட்சி விண்வெளியில் நிகழ வேண்டும். கலை அரசி படத்தில் டிராவல் செய்யும் நேரம் மட்டுமே விண்வெளியில் நடைபெறுவதாக இருக்கும். எனவே, அதை விண்வெளி திரைப்படம் என வரையறுக்காமல், சைன்ஸ் ஃபிக்ஷன் என்று சொல்லலாம். விண்வெளித் திரைப்படம் என்பது சைன்ஸ் ஃபிக்ஷனின் கிளைப்பகுதி என்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். எனவே, டிக் டிக் டிக் திரைப்படமே இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமாகிறது. கலை அரசி திரைப்படம் தன்னளவில் அது ரிலீஸான காலகட்டத்தில் மிகப்பெரிய முயற்சி என்பதை மறுக்கவே முடியாது. வேற்று கிரகத்திலிருந்து வரும் ஏலியன்கள், வடக்கின் எவ்வித கலையையும் ரசிக்காமல் தென்னிந்தியாவின் கலையால் கவரப்பட்டு அதன் அரசியைக் கவர்ந்து சென்றதென்பது எத்தனை பெரிய விஷயம். எம்.ஜி.ஆரின் திராவிட நாட்டுக் கொள்கையினாலேயே அது தென்னிந்திய கலை என்று குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

திங்கள், 4 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon