மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 14 நவ 2019

ஒகி புயல்: முதல்வர் உத்தரவு!

ஒகி புயல்: முதல்வர் உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்யும் பணிகளைத் துரிதப்படுத்தவும் சேதங்களைக் கணக்கிடும் பணிகளை மேற்கொள்ளவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக அரசு சார்பில் நேற்று (டிசம்பர் 4) வெளியிட்ட தகவலில், கன்னியாகுமரி மாவட்டத்தில், 29 நிவாரண முகாம்களில் 2,391 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். தற்போது இயல்பு வாழ்க்கை திரும்புகின்ற காரணத்தால், தற்போது 9 முகாம்களில், 891 பேர் மட்டுமே தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களும் வீடு திரும்பும்வரை போதிய உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து காணாமல்போன 294 மீனவர்களில், 220 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகம், இந்தியக் கடற்படையின் 15 கப்பல்கள், இந்திய விமானப் படையின் 5 இலகுரக விமானங்கள், 5 ஹெலிகாப்டர்கள் மற்றும் கடலோர காவல் படையினருடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

இதுதவிர, மற்ற இடங்களிலிருந்தும் 284 படகுகளில் சென்ற 2,570 மீனவர்களில், இதுவரை 205 படகுகளும், அதிலிருந்து 2,384 மீனவர்களும் மீட்கப்பட்டுச் சம்பந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மீதமிருக்கும் 79 படகுகள் மற்றும் 186 மீனவர்களையும், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்ற 74 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்கும் பணியில் கப்பல் படையும், விமானப் படையும், கடலோரக் காவல் படையும் தொடர்ந்து ஈடுபடும்.

கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத் துறையினரால் 171 ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் 90 சதவிகிதம் குடிநீர் வழங்கல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் போதுமான, பாதுகாப்பான, குளோரின் கலந்த குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும். மீதமுள்ள பகுதிகளுக்கு உடனடியாக லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட வேண்டும்.

சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மருத்துவ முகாம்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று உரிய மருத்துவச் சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்க வேண்டும்.

புயலால் முறிந்து விழுந்த சுமார் 15,000 சாலையோர மரங்களில் 9,252 மரங்கள் அகற்றப்பட்டுவிட்டன.

புயலால் சேதமடைந்த 4,157 குறைந்த அழுத்த மின் கம்பங்களில் 1,998 மின் கம்பங்களும், 2,426 உயரழுத்த மின் கம்பங்களில் 972 மின் கம்பங்களும் மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள மின் கம்பங்களைப் போர்க்கால அடிப்படையில் மின்சாரத் துறை அலுவலர்கள் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் அடுத்த 48 மணி நேரத்துக்குள் மின் விநியோகம் முழுவதுமாக வழங்கப்பட வேண்டும். இப்பணிகளுக்கும் கூடுதலாகப் பணியாளர்கள் தேவைப்படின், பக்கத்து மாவட்டங்களிலிருந்து பணியமர்த்திக் கொள்ள வேண்டும்.

பொதுப்பணித் துறையினரால் 23 கால்வாய்களில் ஏற்பட்ட உடைப்புகளும், 19 ஏரிகளில் ஏற்பட்ட உடைப்புகளும் சரி செய்யப்பட்டுள்ளன.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கணக்கிடும் பணியை முடித்து இம்மாதம் 11ஆம் தேதிக்குள் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 4 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon