மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

சிறப்புக் கட்டுரை: இந்த அரசுக்கு நாடாளுமன்றமே தேவையில்லையா?

சிறப்புக் கட்டுரை: இந்த அரசுக்கு நாடாளுமன்றமே தேவையில்லையா?

ஜெய்வீர் ஷெர்கில்

2014 மே மாதம் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் காலடி எடுத்த வைத்த சமயத்தில் அதன் பிரதான வாயிலில் நெற்றி படும்படி குனிந்து வணங்கினார். “இதுதான் ஜனநாயகத்தின் கோயில்” என்று அறிவித்தார்.

ஆனால், அவரது அரசாங்கத்தின் தன்னிச்சையான செயல்பாடு, ஏராளமான சந்தர்ப்பங்களில் இந்த “ஜனநாயகத்தின் கோயில்” அரசியல் அமைப்புச் சட்டம் கேலிக்குரியதாக மாறியதைக் கண்டது.

நாடாளுமன்றத்தின் முக்கியத்துவம்

நிதியமைச்சர் பொருள்கள் மற்றும் சேவைகள் சட்டம் (ஜி.எஸ்.டி) மாற்றங்கள் குறித்து திரும்பத் திரும்ப அறிவித்துவருகிறார். இந்தச் சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது நாடாளுமன்றத்தின் அதிகாரமும் உரிமையும் பறிபோதலுக்கான அறிகுறி. நமது நாடாளுமன்ற அமைப்பு மற்றும் அரசியல் அமைப்பு சட்டங்களின் அடிப்படைக் கொள்கைகளை நிராகரிப்பதைப் போன்றது.

நமது நாடாளுமன்ற அமைப்பிலான அரசு பிரிட்டிஷ் அரசை முன்மாதிரியாகக் கொண்டது. இதன் அரசியல் அமைப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில பிரதிநிதிகளிடம் அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளது. இது ‘மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாமல் வரிவிதிப்பு கிடையாது’ என்ற கோட்பாட்டைப் புனிதப்படுத்துகிறது. குடிமக்களிடம் அரசின் பொறுப்புடைமை, நாடாளுமன்றத்தில் அதன் பணிகளை மீளாய்வு செய்தல் மூலமாகச் செயல்படுத்தப்படுகிறது. ஜி.எஸ்.டி சட்டத் திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தை மீறி அரசு தன்னிச்சையாக அறிவிப்பது இதற்கு எதிர்மாறாக உள்ளது.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பை நீண்டகாலமாக எதிர்த்துவந்த பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இச்சட்டத்தின் நன்மைகளை உணர்ந்தது. ஒருங்கிணைந்த ஒற்றை மறைமுக வரிவிதிப்புக்கான நடைமுறைகளை காங்கிரஸ் அரசு உருவாக்கியது. ஆனால், பாரதிய ஜனதா இந்த வரிவிதிப்பை அமல்படுத்திய பிறகு அதன் விளைவுகள் இந்த வரிவிதிப்புக்கான அடிப்படையிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பின் வரி சீரமைப்புக் குறிக்கோளுக்கே இது விரோதமாக உள்ளது. இதன் விளைவாக, அடிப்படைக் குறைபாடுகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன.

ஜி.எஸ்.டி அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, 18 சதவிகிதம் என்பதை உச்சவரம்பாக நிர்ணயிக்க முடியாது என்று அரசு தொடர்ந்து கூறிவந்தது. உச்சவரம்பு 28 என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த வரி விகிதங்கள் அவசர கதியில் திருத்தி அமைக்கப்படுகின்றன. 28 சதவிகிதமாக இருந்த பெரும்பாலான பொருள்கள் / சேவைகளுக்கான வரி விகிதம் 18 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 18 சதவிகிதத்தை உச்சவரம்பாக நிர்ணயிக்கலாம் என்னும் காங்கிரஸின் ஆலோசனையைப் புறக்கணித்தது தவறு என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது.

தவிர்க்கப்படும் நாடாளுமன்ற விவாதம்

அரசு, ஜி.எஸ்.டி மசோதாவைக் குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடப்பதைத் தவிர்த்து இதன்மூலம் மேல் சபையின் முக்கியத்துவத்தைப் புறக்கணித்தது. நாடாளுமன்றத்தில் இதை முன்வைத்து, இந்தச் சட்டத்தில் உள்ள கட்டமைப்புக் குறைபாடுகளை விளக்கி, இதைத் திருத்துவதற்கான நாடாளுமன்ற ஒப்புதலை நாடும் வாய்ப்பு இருந்தது. ஆனால், மீண்டும் ஒருமுறை, நாடாளுமன்றத்தின் ஆய்வு தவிர்க்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் கலந்தாய்வுக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ள மோடி அரசு விரும்பவில்லை. இது, அரசின் யதேச்சதிகார செயல்பாட்டு முறை, அது எடுத்துவரும் தர்க்கரீதியற்ற முடிவுகளுக்கு விளக்கம் சொல்ல முடியாத இயலாமை ஆகிய இரண்டையும் பின்வரும் இரண்டு விஷயங்களை அம்பலப்படுத்துகிறது.

பொருளாதாரம் பற்றியோ அல்லது வெளியுறவுக் கொள்கை பற்றியோ நாடாளுமன்றத்தில் விவாதிக்க இந்த அரசு முன்வரவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து ஊடகங்கள் மூலமாகவே அறிந்துகொள்கின்றனர். அரசு ஏன் தனது செயல்பாடுகளை நாடாளுமன்றம் மூலமாக அல்லாமல், ஊடகங்கள் மூலமாக நியாயப்படுத்திவருகிறது? நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பொறுத்தவரை இது ஒரு கவலைக்குரிய அறிகுறி.

சுருக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகள்

ஒரு மாநிலத் தேர்தலுக்காக அரசாங்கம் ஒரு நாடாளுமன்ற அமர்வை எப்படித் தவிர்க்கலாம்? பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, சமூக - பொருளாதாரத் துறை, வெளியுறவுக் கொள்கை, வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் அரசு பெற்றுள்ள தோல்வி, காஷ்மீர் நெருக்கடி, ஊழல் விவகாரங்கள், டோக்லாம் விவகாரம், சீனாவின் ஆக்ரமிப்பு, சமூக ஒழுங்கு சீரழிந்துவரும் தன்மை ஆகியவை காரணமாகப் பொது அரங்கில் சங்கடம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான உத்திதான் இது.

மக்கள் ஆவேசமடைந்துள்ளனர். நாடாளுமன்ற ஒப்புதலுக்காக ஏராளமான முக்கிய சட்டங்கள் நிலுவையில் உள்ளன. தேசத்தின் மனநிலையை உணர்ந்த மோடி அரசு, இந்த முறை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின் கால அவகாசத்தைக் குறைத்துவிட்டது. இந்தக் குளிர்காலக் கூட்டம் சுமார் 14 அமர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் மிகக் குறைவான அமர்வுகளில் இதுவும் ஒன்று.

குஜராத் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற 2002, 2007 அல்லது 2012ஆம் ஆண்டிலோ நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் தள்ளிப்போடப்படவோ அல்லது அமர்வுகள் குறைக்கப்படவோ இல்லை. 2012இல், குளிர்காலக் கூட்டம் நவம்பர் 18 முதல் டிசம்பர் 20 வரை நடத்தப்பட்டது, 2007இல் நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரையிலும், 2012இல் நவம்பர் 22 முதல் டிசம்பர் 20 வரையிலும் நடத்தப்பட்டன.

நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வரலாறு பாரதிய ஜனதா கட்சிக்கு உண்டு. அடல் பிஹாரி வாஜ்பாயின் ஆட்சியில்தான் நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக, அனைத்து அமைச்சகங்களின் மானியங்களுக்கான கோரிக்கை விவாதங்களும் புறக்கணிக்கப்பட்டன. ஒரே ஓர் அமைச்சகத்தின் – விவசாயம் – மானியக் கோரிக்கை மட்டுமே விவாதிக்கப்பட்டது. அதுவும் வெறும் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே. பல்ராம் ஜாக்கர் 15 நிமிடங்கள் பேசினார். ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சியின்போது, எதிர்க்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து, நாடாளுமன்றத்தை முடக்கியவண்ணம் இருந்தது.

பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த உடனேயே, சட்ட அமைப்புகள் மூலம் ஆட்சி செய்யும் போக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டது. சட்ட விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கான விருப்பமான வழிமுறையாக அவசர சட்ட ஆணைகள் (Ordinances) மாறின. மோடி அரசு ஆண்டுக்குப் பத்து அவசர சட்டங்களைப் பிரகடனம் செய்தது. குறிப்பாக, ‘உத்தரகாண்ட் ஒதுக்கீட்டுச் சட்ட ஆணை, 2016’ பிறப்பிப்பதற்காக நாடாளுமன்றக் கூட்டத்தையே தள்ளிவைக்கும் அளவுக்கு எல்லை மீறியது.

மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே ஆதார் மசோதா, ஒரு பண மசோதாவாகச் சான்றளிக்கப்பட்டபோது, அரசியலமைப்புச் சட்ட வல்லுநர்கள் வியப்படைந்தனர். அந்த மசோதாவுக்கு வரி விதிப்பு, வரி நீக்கம் அல்லது மாற்றல் ஆகியவற்றோடு எந்த தொடர்பும் இல்லை. அரசின் எந்த நிதிப்பொறுப்பும் இதில் இல்லை. என்றாலும், இது பண மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட்டதற்குக் காரணம், மாநிலங்கலவையைத் தவிர்ப்பதுதான்.

சட்டத்தை மீறுவதற்கான தொடர்ச்சியான முனைப்புகள், பொறுப்புடைமை உள்ள ஒரு நிறுவனம் என்ற முறையில் நாடாளுமன்றத்தின் நம்பகத்தன்மையைச் சீர்குலைத்துள்ளது. மோடி பாணியிலான நிர்வாகம், சட்டபூர்வமான செயல்பாடுகளைக் குறைத்து மதிப்பிடுகிறது. இவர் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குப் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளார். இன்றைய அரசில் நாடாளுமன்றத்தின் பொருத்தப்பாடு என்ன என்பது குறித்த தீவிரமான கேள்விகள் எழுகின்றன.

ஜனநாயக அமைப்பின் மிகப் பெரிய நிறுவனம் நாடாளுமன்றம்தான். இது மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கும் இதில் பொறுப்பு உள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தின் நம்பகத்தன்மையை உறுதிசெய்வது அரசின் பிரதான கடமை. பதில் சொல்லும் பொறுப்பு கொண்ட ஓர் அமைப்பாக நாடாளுமன்றம் வலுப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் செழிப்படையும்.

(கட்டுரையாசிரியர் ஜெய்வீர் ஷெர்கில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர். இந்திய தேசிய காங்கிரஸின் தேசிய ஊடகக் குழுவைச் சேர்ந்தவர்.)

நன்றி: Thewire.in

தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

திங்கள், 4 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon