மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

பத்மாவதி: புதிய ‘நியாயமான’ பிரச்னை!

பத்மாவதி: புதிய ‘நியாயமான’ பிரச்னை!

பத்மாவதி திரைப்படத்துக்கு எதிராக நடைபெற்றுவந்த பிரச்னைகளில் ராஜபுத்திர அமைப்புக்கு ஓய்வுகொடுத்துவிட்டு, ராஜஸ்தானின் ஜயஸி மக்கள் களமிறங்கத் தயாராக இருக்கிறார்கள். எவ்வித முன்னுரையுமின்றி, ஒரு விளக்க உரைக்குள் நுழையப் போகிறோம் இப்போது.

பத்மாவதி படத்துக்கு எதிரான போராட்டம் கட்டுக்கடங்காத நிலையை எட்டியதும், பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் தலைமையிலான பாராளுமன்றக் குழு, பத்மாவதி படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியை அழைத்து விசாரித்தது. அப்போது பன்சாலி என் படத்துக்கும் ராஜபுத்திர ராணி பத்மாவதிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நான், சூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜயஸியின் ‘பத்மாவத்’ என்ற கவிதையை அடிப்படையாகக்கொண்டு படமெடுத்தேன் என்று கூறினார்.

ராஜஸ்தானின் சித்தூர் கோட்டையில் அலாவுதீன் கில்ஜி நுழைந்த இருநூறாவது வருடத்தில் கவிஞர் ஜயஸியின் மூலம் ‘பத்மாவத்’ என்ற கவிதை எழுதப்பட்டது. அவரது கவிதைத் திறமையைப் பாராட்டி, அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடத்தை நினைவுச் சின்னமாகப் பிரதமர் ராஜீவ் காந்தி அறிவித்து, அவரது குடும்பத்துக்கு அதன் பொறுப்பையும் ஒப்படைத்திருந்தார்கள். இப்போது, ஜயஸியின் கவிதையிலிருந்து பத்மாவதி படமாக்கப்பட்டிருப்பதாக பன்சாலி கூறியிருப்பதால், ‘அந்தக் கவிதை உருவான இடம் இது. அதை உருவாக்கியவர் எங்கள் கவிஞர். எனவே, அவரது அறக்கட்டளைக்கு ராயல்டி கொடுக்க வேண்டும்’ என்று ஜயஸியைச் சேர்ந்தவர்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள்.

நாங்கள் பணம் கேட்பது எங்களது சொந்த லாபத்துக்காக அல்ல. அத்தனைப் பெரிய கவிஞரின் நினைவுச் சின்னம் எவ்வளவு மோசமாக இருக்கிறதெனப் பாருங்கள். பேச்சுக்குக்கூட சுகாதாரமும் வளர்ச்சியும் இல்லை. எவ்வித உதவியும் இல்லாமல் எங்களால் எப்படி இத்தனைப் பெரிய இடத்தைப் பராமரிக்க முடியும். கலையின் பெயரால் ஜயஸியைப் பயன்படுத்துபவர்களாவது உதவ வேண்டுமல்லவா? என குவிண்ட் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் ஆதங்கப்படுகிறார் ஃபலக் ஜயஸி.

திங்கள், 4 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon