மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

உச்ச நீதிமன்றத்தில் இன்று அயோத்தி வழக்கு!

உச்ச நீதிமன்றத்தில் இன்று அயோத்தி வழக்கு!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை, இன்று (டிசம்பர் 5) டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்திலுள்ள அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தமானது என்ற வழக்கில், கடந்த 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் அந்த நிலமானது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ராம் லல்லா, நிர்மோகி அகாரா, சன்னி வக்பு வாரியத்துக்கு வழங்குவதாக உத்தரவிட்டது. இதற்கு எதிராக, மூன்று தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியலமைப்பு அமர்வில் இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க உ.பி. மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த ஆவணங்கள் சுமார் 90 ஆயிரம் பக்கம் கொண்டது. அப்போதே, டிசம்பர் 5ஆம் தேதியன்று இறுதி கட்ட வாதம் நடைபெறும் என நீதிபதிகள் அமர்வு தெரிவித்திருந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் முடிந்திருக்கும் சூழலில், இன்றிலிருந்து இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கவுள்ளது.

இந்த வழக்கை ஏழு பேர் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டுமென மேதா பட்கர், ஷ்யாம் பெனகல் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் வெகுகாலமாக குரல் கொடுத்து வருகின்றனர். பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, ஷியா வக்பு வாரியம் சார்பிலும் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நிலம் தொடர்பான விசாரணை ஒருமுடிவுக்கு வந்தபின்பு, இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

திங்கள், 4 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon