மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 21 ஜன 2021

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப்  வடிவேலுவெற்றிநடை போடும் தமிழகம்

குமரேசன் தான் வேலை செய்யும் கம்பெனியிலிருந்து வெளியே வந்தான். கண்ணன் நேராக அவனிடம் வந்து “ஒரு கட்டிங் போட்டுட்டுப் போலாமா” என்றான். “சரி” என்று குமரேசன் அவனுடன் நடந்தான். வழியில் குமரேசனுடைய செருப்பு ‘சரக்’ என அறுந்தது. குமரேசன் கண்களில் நீர் அருவியாய் பெருக்கெடுத்தது.

“டேய், ஒரு சாதாரண செருப்பு பிஞ்சு போனதுக்கா இப்படி கண்ணீர் விடற?” என்று சிரித்தான் கண்ணன்.

“அதுக்கு இல்ல... என் மனைவி ஒரு தீர்க்கதரிசி... அது எனக்கு இப்போதான் தெரிஞ்சுது” என்றான்.

“ஓஹோ... அது எப்படி இப்ப தெரிஞ்சுது?” என்றான் கண்ணன்.

“காலைல வரும்போதே என் பொண்டாட்டி சொன்னா, ‘வேலை முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வராம சாராயக்கடைக்குப் போனே செருப்பு பிஞ்சுடும்’னு. இப்போ பாரு அதே மாதிரி நடந்துருச்சு.”

- இந்த மெசேஜ் கிட்டத்தட்ட 40 தடவை எனக்கே சுத்தி சுத்தி வந்துச்சு.

அதில் உள்ளடங்கிய ஒரு விஷயம் ரொம்ம்ம்ம்ப லேட்டா எனக்கு புரிஞ்சது. எனக்கு அனுப்பிய அத்தனை பேரும் தமிழகத்தின் ஒப்பற்ற குடிமகன்கள். உஸ்ஸ்ஸ்... முடில.

ஆனா இதாச்சும் பரவால்ல... இன்னொரு மெசேஜ்... ஃப்ரெண்ட்ஷிப் மெசேஜாம்.

ஆசிரியர் வகுப்பில் ஒரு கேள்வியைக் கேட்டார், “எண்களில் உங்களுக்கு பிடித்த எண் எது?”

இக்கேள்விக்கு ஒரு மாணவி கூறிய பதில் சிந்திக்கும்படி இருந்தது.

அந்த மாணவியின் பதில், “எண்களில் சிறந்த எண் ஏழு தான். ஏனென்றால்...

1) ஏழு நிறங்கள் சேர்ந்தால்தான் அழகான ‘வானவில்’ பிறக்கிறது.

2) ஏழு ஸ்வரங்கள் சேர்ந்தால்தான் ஓர் ‘இசை’ உருவாகிறது.

3) அதே போல் ஏழு நாள்கள் சேர்ந்தால்தான் ஒரு ‘வாரம்’ கிடைக்கிறது.

4) எல்லாவற்றுக்கும் மேலாக ஏழு ஆங்கில எழுத்துகள் சேர்ந்தால்தான் உயிரினும் மேலான நட்‘பூ’, (FRIENDS) என்னும் வார்த்தை உருவாகிறது.”

இவ்வாறு அந்த மாணவியின் பதில் இருந்தது.

ஆசிரியர் அந்த மாணவியை பாராட்டினார். . .

உண்மையான வார்த்தைகள்.

கீழப்பாப்பரப்பா பட்டியைச் சேர்ந்த பானுமதி என்ற அந்த மாணவியை பாராட்டலாமே ஃப்ரெண்ட்ஸ். நடிகைகளுக்கெல்லாம் லைக்ஸ் வரும். இதுபோன்ற ஏழைக் குழந்தைகளுக்கெல்லாம் லைக்ஸ் வருமா?

அப்படீன்னு பேரெல்லாம் எழுதி, மைசூரில் ரயில்வே ஸ்டேஷனில் காணாமல் போன சிறுமியின் படம் ஒண்ணு உலாவுமே... அதைப் போட்டு லைக்ஸும், ஷேரும், அனுதாபமும், சமூக அக்கறையும் வாங்கிக்கிட்டு இருக்காங்க நம்மாளுங்க!

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon