மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 25 ஜன 2020

வேட்டை: மனிதர்களா, மிருகங்களா?

வேட்டை: மனிதர்களா, மிருகங்களா?

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்துவந்த உயிரினங்களைத் தத்ரூபமாகச் சித்திரித்து அதன்மூலம் வெற்றி பெற்ற திரைப்படங்கள் பல உள்ளன. அந்த வரிசையில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படமான ஜுராசிக் பார்க் திரைப்படம் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. உசைன் போல்ட்டைவிட அதிகமாக ஓடியவர்கள் ஜுராசிக் பார்க் சீரீஸ் படங்களில் நடித்தவர்களாகத்தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட திரைப்படத்தின் டீசருக்கு RUN எனப் பெயர் வைத்திருப்பது சாலப் பொருத்தம்.

2015ஆம் ஆண்டு வெளியான ஜுராசிக் வேர்ல்டு திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 2018ஆம் வருடம் ஜூன் 22ஆம் நாள் இந்தத் திரைப்படத்தை திரையிடுவதாகப் படக்குழு ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜுராசிக் வேர்ல்டு ஃபாலன் கிங்டம் என்ற தலைப்பில் தயாராகியுள்ள இந்தத் திரைப்படத்தின் டீசர் ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி வருகிற வியாழன் அன்று முழு ட்ரெய்லரும் வெளியாகும் என்ற அறிவிப்பும் அதனுடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் இடம்பெறும் மனித ஹீரோ கிறிஸ் பிராட் ஓடி வரத் தொடங்கும்போது முதலில் சிறிய டைனோசர்களும், பிறகு பறக்கும் டைனோசர்களும் ஓடிவரும். இவைதான் துரத்துகின்றன என்று நினைக்கும்போது பின்னால் எரிமலை வெடிப்பதைக் காட்டியிருக்கிறார்கள். படத்தின் முக்கியமான இண்டோமினஸ் ரெக்ஸ் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப் போகும் பாரியோனிக்ஸ் ஆகியவற்றின் அடையாளம் இல்லை. டிசம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகும் ட்ரெய்லரில் அவற்றில் ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கலாம்.

பாரியோனிக்ஸ் என்பது ஜுராசிக் பார்க் 2 (தி லாஸ்ட் வேர்ல்டு) திரைப்படத்தில் பார்த்த ஸ்பைனோசரஸ் இனத்தைச் சேர்ந்தது. ஸ்பனோசரஸைவிட பத்து மில்லியன் ஆண்டுகள் வயதானது. பாரியோனிக்ஸ் அழிந்த பிறகு நடைபெற்ற பரிமாண வளர்ச்சியினாலேயே ஸ்பைனோசரஸுக்கு முதுகில் ஒரு தண்டுவடம் வளர்ந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அத்துடன் இரண்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை.

ஜுராசிக் வேர்ல்டின் முதல் பாகத்தில் மீதமிருக்கும் ரேப்டர் ‘ப்ளூ’வை மையப்படுத்தி உருவாகும் இந்தத் திரைப்படத்தின் மூலம் பாரியோனிக்ஸை அறிமுகப்படுத்தி, அடுத்த பாகத்தில் முக்கிய வில்லனாகக் காட்டுவதே இந்தத் திரைப்படத்தின் நோக்கம். இந்தப் படத்துக்கான மெயின் வில்லனாக, ‘இண்டோரேப்டர்’ என்ற புதிய ஹைபிரிட் டைனோசரை அறிமுகப்படுத்துகின்றனர். வெலாசிரேப்டர்களின் வரிசையில் மீதமிருக்கும் ஒரே ஒரு புளூ இறந்த பிறகு உருவாவதாகவே இந்த இண்டோரேப்டரைப் பார்க்க வேண்டியதிருக்கிறது. ஜுராசிக் வேர்ல்டு இரண்டாம் பாகத்தில் முதல் டீசரில், படத்தின் மனித ஹீரோ கிறிஸ் பிராட், பிறந்து சில மாதங்களே ஆன வெலாசிரேப்டர் ஒன்றை கொஞ்சுவது போன்ற வீடியோ வெளியிடப்பட்டதைக் குறிப்பிட வேண்டும். அது என்ன மனித ஹீரோ என்ற அடைமொழி? மிருக ஹீரோ என்ற ஒன்று இருக்கிறதா என்று கேட்டால் அதற்கான பதில், ஆம். மேலும் விளக்கமாகக் கேட்டால், மிருக ஹீரோ டி-ரெக்ஸ் இந்தத் திரைப்படத்திலும் இடம்பெற்றிருக்கிறது. அதன் அடிக்குரலையே டீசரின் பின்னணி இசையில் பயன்படுத்தியிருக்கிறார்கள். நீங்களே கேளுங்கள்.

Jurassic World: Fallen Kingdom Teasar

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon