மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 25 ஜன 2020

இவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்!

இவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், நாம் தமிழர் சார்பில் கலைக்கோட்டு உதயம், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் தினகரன், விஷால், தீபா உள்ளிட்டோர் சுயேச்சையாகவும் போட்டியில் உள்ளனர். இதனால் தற்போதைய நிலையில் ஏழு முனை போட்டி நிலவி வருகிறது.

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருக்கு முன்னதாகவே நடிகர் விஷால் தனது முடிவை அறிவித்துள்ளார். தொடர்ந்து, “தான் அரசியல்வாதியாக போட்டியிடவில்லை” என்றும், “மக்களின் பிரதிநிதியாகவே போட்டியிடுகிறேன்" என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் விஷாலுக்கு வரவேற்பு தெரிவித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “விஷாலின் அரசியல் வரவு பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருந்து ஊக்கப்படுத்தி உள்ளது” என்றும், டெல்லி வரும்போது சந்திக்கவும் அழைப்பு விடுத்தார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள விஷால், “டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவரைப் பின்பற்றித்தான் நான் அரசியலுக்கு வந்தேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாற்றம் தவிர்க்க முடியாததுதான்” என்றும், “நம்நாடு ஓர் உலகளாவிய அதிகார மையமாக மாற்றுவதற்கு இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon