மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 25 ஜன 2020

சிறப்புக் கட்டுரை: நதியில் மிதக்கும் பால் பண்ணைத் தொழில் கரையேறுமா?

சிறப்புக் கட்டுரை: நதியில் மிதக்கும் பால் பண்ணைத் தொழில் கரையேறுமா?

ரத்னபரலி தலுக்தர்

ஒவ்வொரு நாள் அதிகாலையும் பிளாஸ்டிக் மற்றும் அலுமினியக் கேன்கள் கட்டப்பட்ட இயந்திரப் படகுகள் சலகுரா கிராமத்திலிருந்து பிரம்மபுத்திரா நதியில் நீந்திச் செல்கின்றன. இந்தப் படகுகள் இங்கிருந்து தூப்ரி நகரத்துக்குப் பாலை எடுத்துச் செல்கின்றன. தூப்ரியிலிருந்து மதிய வேலையில் திரும்பும் படகுகள் மீண்டும் பாலை ஏற்றிக்கொண்டு நீந்தத் தொடங்குகின்றன.

தீவுப் பகுதிகளில் ஒன்றான சலகுரா கிராமத்தின் மேண்டல் குடும்பத்துக்குச் சொந்தமான பால் பண்ணையிலிருந்தே அதிகளவில் பால் எடுத்துச் செல்லப்படுகிறது. இக்குடும்பம் பால் கறப்பதற்காக 50 கால்நடைகளை வளர்த்து வருகிறது. இப்பண்ணையில் தினசரி 100 முதல் 120 லிட்டர் அளவிலான பால் உற்பத்தி செய்யப்படுகிறது. “எங்களது பசுக்களும் எருமைகளும் பால் தரும் பருவத்தின் உச்சத்தில் இருக்கும்போது தினசரி 180 முதல் 200 லிட்டர் வரையிலான பால் தினசரி உற்பத்தி செய்யப்படும்” என்கிறார் 43 வயதானவரும் மூன்று குழந்தைகளுக்குத் தகப்பனுமான தமேசுதின் மேண்டல். தூப்ரி நகருக்குக் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் இவர்களுக்கு ரூ.40 கிடைப்பதாக மேண்டல் கூறுகிறார்.

சலகுரா கிராமத்தைச் சேர்ந்த 791 குடும்பங்களுக்கும் பால் பண்ணைத் தொழில் மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த கால்நடைகளும் தினசரி சராசரியாக 30 முதல் 40 லிட்டர் அளவிலான பாலைக் கொடுக்கின்றன. இக்குடும்பங்களுக்கெல்லாம் முன்னோடியாக உள்ள மேண்டல்தான் முதன்முதலில் கலப்பின மாடுகளை இங்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். இங்கு உற்பத்தியாகும் பெரும்பாலான பாலானது கலப்பின மாடுகளிடமிருந்தே கறக்கப்பட்டவையாகும். இண்டிஜினஸ் மற்றும் ஜெர்சி இனத்தைக் கலப்பினமாகக்கொண்ட இம்மாடுகள் பீகார் மாநிலச் சந்தைகளிலிருந்து வாங்கி வரப்பட்டவையாகும்.

“கலப்பின மாடுகளைக்கொண்டு வந்தபிறகு பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. இம்மாடு ஒன்று 10 முதல் 14 லிட்டர் பாலைத் தினமும் கொடுக்கிறது. ஆனால், இண்டிஜினஸ் மாடு ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் பாலை மட்டுமே கொடுக்கிறது. எருமை மாடுகள் ஒரு நாளைக்கு 12 முதல் 16 லிட்டர் பாலைக் கொடுக்கின்றன” என்கிறார் இக்கிராமத்தைச் சேர்ந்த பால் பண்ணையாளர்களில் ஒருவரான அன்வர் ஹூசைன்.

2015-16ஆம் ஆண்டின், அஸ்ஸாம் மாநிலப் பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றில், அம்மாநிலத்தைச் சேர்ந்த சில பகுதிகளில் மட்டுமே இந்தக் கலப்பின கால்நடைகள் பிரபலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, 2014-15ஆம் ஆண்டில் அஸ்ஸாம் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த பாலில் (873 மில்லியன்), வெறும் 246.06 மில்லியன் லிட்டர் மட்டுமே கலப்பின மாடுகள் உற்பத்தி செய்ததாகும்.

சலகுரா பகுதியில் இருக்கும் 5 பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில், மேண்டல் தலைமை வகிக்கும் ’சலகுரா மிலான் டுக்தா உத்படக் சோமாபாய் சமிதி’ சங்கமும் ஒன்றாகும். தூப்ரி மாவட்டத்திலேயே பால் உற்பத்திக்கு மிகவும் பேர்போன மேண்டல், அம்மாவட்டம் சார்பாக நடத்தப்படும் பல்வேறு கூட்டத்தில் பால் உற்பத்தியை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்துச் சிறப்புரையாற்றியிருக்கிறார். இவரது சங்கத்தில் மொத்தம் 51 பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

சலகுரா கிராமத்தைச் சேர்ந்த பால் பண்ணைகள் பற்றி பல்வேறு வெற்றிக் கதைகளை தூப்ரி மாநில அரசு பலமுறை திரையிட்டுள்ளது. இந்த வெற்றிக் கதைகளுக்குப் பின்னால் தங்களது கால்நடைகளுக்குப் போதிய தீவனம் இல்லாமல் வாடும் அவர்களின் சோகக் கதையும் அடங்கியிருக்கிறது.

2016ஆம் ஆண்டு வரையில் மத்திய அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அஸ்ஸாம் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த கோதுமையானது அம்மாநிலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.600 விலையில் கால்நடைத் தீவனப் பயன்பாட்டுக்காக விநியோகிக்கப்பட்டு வந்தது. மேண்டல் குடும்பமும் ஒவ்வொரு மாதமும் 25 குவிண்டால் அளவிலான கோதுமை உமியை மானிய விலையில் பெற்று வந்தது.

2015 டிசம்பரில் அஸ்ஸாம் மாநில அரசின் கோரிக்கைக்கு இணங்கி, அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அரிசியையும், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கோதுமையையும் மட்டும் விநியோகிக்க மத்திய உணவு மற்றும் பொது விநியோக விவகார அமைச்சகம் அம்மாநிலத்துக்கான உணவு விநியோக அளவை மாற்றியமைத்தது. அதன் பின்னர் அஸ்ஸாம் மாநிலத்துக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.610 விலையில் 8,272 டன் அளவிலும், 2016 ஜூலை மாதத்துக்குப் பிறகு 5,781 டன் அளவிலும் கோதுமை விநியோகிக்கப்பட்டது.

ஆனால், 2016 டிசம்பர் மாதத்துக்குப் பிறகு அஸ்ஸாம் மாநிலத்துக்குத் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கோதுமை விநியோகிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதுகுறித்து 2016 நவம்பர் 30ஆம் தேதி மத்திய உணவு மற்றும் பொது விநியோக விவகார அமைச்சகம் சார்பாக அஸ்ஸாம் மாநிலத்துக்கு எழுதப்பட்ட கடிதத்தில் “மத்திய அரசின் இருப்பில் கோதுமைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாநில அரசுகளுக்குக் கோதுமைக்குப் பதிலாக 2016 டிசம்பர் முதல் 2017 மார்ச் வரை அரிசி விநியோகிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பிறகு சலகுரா கிராமப் பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் கால்நடைத் தீவனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் வேறு வழியின்றித் தீவனங்களை அதிக விலை கொடுத்துச் சந்தைகளில் வாங்கும் நிலை உருவாகியுள்ளது. ஒரு குவிண்டால் தீவனத்தின் விலை ரூ.2,000 வரையில் இருக்கிறது.

“இப்போது பாலின் விலை லிட்டருக்கு 40 ரூபாயாக இருக்கிறது. ஆனால் தீவனத்தின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் பாலின் விலை 50 ரூபாய்க்கும் மேல் உயர்ந்தால் தான் எங்களால் தாக்குப் பிடிக்க முடியும்” என்று மேண்டல் கவலையுறுகிறார்.

மேண்டலின் குடும்பம் மிகவும் பெரியது. 35 பேர் அடங்கிய இக்குடும்பத்தில் மேண்டலின் சகோதரர்கள் மட்டும் ஐந்து பேர். இவர்கள் ஆறு பேரும் இணைந்துதான் பால் பண்ணையை நடத்தி வருகின்றனர். இவர்களுக்குச் சொந்தமாக உள்ள 2 ஏக்கர் விவசாய நிலத்தில் பெண்கள் பல்வேறு பயிர்களை விளைவிக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமான உணவானது சிறிய சமையலறை ஒன்றிலேயே தயாராகிறது. இவர்கள் கூட்டுக் குடும்பமாக இருப்பதால் மட்டுமே பால் பண்ணை வாயிலாகக் கிடைக்கும் வருவாய் இவர்களுக்கு ஓரளவுக்குப் போதுமானதாக இருக்கிறது. இவர்கள் ஆறு குடும்பங்களாகப் பிரிந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

பால் பண்ணைத் தொழிலானது தீவிர உழைப்புக்கான தொழில் என்று கூறும் மேண்டல், “அதிகம் பால் தரும் இந்தக் கலப்பின மாடுகளுக்கு நாள் முழுவதும் தீவனம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இவற்றைக் கவனித்துக்கொள்ள ஓர் ஆள் தனியாகவே வேண்டும். மேலும், இவற்றுக்கு ஏதேனும் சுகாதாரப் பிரச்னை ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவதும் கடினமாக உள்ளது. அரசு கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்குத் தட்டுப்பாடு உள்ளது. மேலும், இரவு நேரங்களில் மாடுகளுக்கு ஏதேனும் ஏற்பட்டால் மருத்துவர்களை அவசரமாக அழைத்து வரப் படகுக்கு மட்டும் ரூ.2,500 முதல் ரூ.3,000 வரையில் செலவாகிறது” என்கிறார்.

சலகுரா பகுதி மக்கள் மண்ணரிப்புப் பிரச்னை குறித்து மிகவும் கவலை கொண்டுள்ளனர். எனினும், மண்ணரிப்பைத் தொடர்ந்து மணல் கட்டிகள் உரிவாகிவிடுவதால் இப்பிரச்னை மாபெரும் இழப்பு எதையும் ஏற்படுத்தாமல் உள்ளது. சலகுரா கிராமமானது 135 முதல் 1,452 வரையிலான மக்கள்தொகையைக் கொண்ட ஐந்து வெவ்வேறு பகுதிகளை உள்ளடக்கியதாகும். இங்குள்ள மக்கள் ஒவ்வொரு மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஆங்காங்கே இடம்பெயருகின்றனர். மேண்டல் கூட இதுவரை 15 முறை அங்கேயே இடம்பெயர்ந்துள்ளாராம்.

இங்குள்ள மக்களுக்குப் பால் பண்ணைத் தொழிலே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. “மண்ணரிப்புப் பிரச்னையால் நாங்கள் அடிக்கடி இடம்பெயர வேண்டியிருப்பதால் எங்களது முன்னோர்கள் பால் பண்ணைத் தொழிலைக் கையிலெடுத்தனர். இதற்குப் பதிலாக விவசாயம் செய்தால் பயிர்கள் வளர்ந்து தயாராக இருக்கும்போது இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் என்ன செய்வது? எனவே மழை வெள்ளம், மண்ணரிப்பு போன்ற பிரச்னைகள் இருந்தாலும் பால் பண்ணைத் தொழில் எங்களுக்குக் கைகொடுக்கிறது. நாங்கள் புதிதாக இடம்பெயரும் பகுதிக்கு கால்நடைகளை ஓட்டிச் சென்று அங்கேயே பால் பண்ணைத் தொழிலை மேற்கொள்ள இயலும். இவ்வாறு இடம்பெயருவது எங்களது வாழ்க்கையிலேயே ஒன்றிவிட்டது” என்று அலுத்துக் கொள்கிறார் மேண்டல்.

இக்கிராம மக்களுக்குப் பால் வாயிலாகக் கிடைத்த அதிக வருவாயைக் கொண்டு, தங்களது குடிசை வீடுகளைத் தகரம் மற்றும் மரத்தாலான வீடுகளாக இவர்கள் தரம் உயர்த்திக் கொண்டனர். இவர்கள் இடம்பெயரும் போதும் இவற்றையும் அவர்கள் எளிதாக எடுத்துச் செல்கின்றனர்.

சலகுரா கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பால் பண்ணைத் தொழில் முக்கியத் தொழிலாக மாறியுள்ளது. ஒவ்வொரு நாள் காலையும் எந்திரப் படகு ஒன்று இப்பகுதிகளிலிருந்து தூப்ரி நகருக்குப் பாலை ஏற்றிச் செல்வதைக் காணமுடியும். ஆனாலும், கால்நடைத் தீவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால் பால் பண்ணைத் தொழில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூப்ரி மாவட்ட கால்நடை மருத்துவ அதிகாரியான கோகாய் கூறுகையில், “கால்நடைத் தீவனங்களுக்கான மாற்று வழிக்கு அதிக மகசூல் தரும் பச்சைப் புற்களை விளைவிக்கும் அம்சங்கள் குறித்து பால் பண்ணையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அவ்வப்போது மாவட்ட கால்நடைத் துறை பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகிறது. மேலும், கால்நடைகளைப் பராமரிப்பதற்காகவே பிரத்யேகமான பணியாளர்கள் சிலருக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. சலகுரா பகுதியிலிருந்து ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியளிக்கப்படவுள்ளனர்” என்றார்.

மறுபுறமோ பிரம்மபுத்திரா நதியில் பாலை ஏற்றிக்கொண்டு நீந்திச் செல்லும் படகுகளின் வேகம் குறைந்துள்ளது. இயல்புநிலை மீண்டும் திரும்பிவிடாதா என்ற ஏக்கத்தில் அப்படகுகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் சலகுரா பகுதி பால் பண்ணையாளர்கள்!

நன்றி: [ரூரல் இந்தியா ஆன்லைன்]

தமிழில்: செந்தில் குமரன்

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon