மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 25 ஜன 2020

பணப்பட்டுவாடா செய்தாரா எம்.எல்.ஏ?

பணப்பட்டுவாடா செய்தாரா எம்.எல்.ஏ?

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பான சர்ச்சைகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மின்சாரம் தாக்கி தொழிலாளிகள் பலியானது, பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்வது, உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பிரமாண்ட பேனர்கள் வைத்தது என்று சர்ச்சைகளுக்கு குறைவில்லை.

குறிப்பாகக் கோவையில், நடந்து முடிந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பலத்த விமர்சனத்தைச் சந்தித்துள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி மென் பொறியாளர் ரகு மரணம் அடைந்தது மட்டுமல்லாது. ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டமே சீர்குலைந்த நிலையில், ஆடம்பர விழா தேவையா என்று பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், கோவையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு ஆட்களைத் திரட்ட பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகப் புகார் கிளம்பியுள்ளது.

சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு ஆட்களை அழைத்துவர, தன் இல்லத்தில் தொண்டர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதுபோன்ற வீடியோ , சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

எந்தப் பகுதி மற்றும் எத்தனை வண்டிகள் என்று கேட்டுவிட்டு பணத்தை அவர் தருவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அருகில் ஏராளமான பெட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டை கனகராஜ் மறுத்துள்ளார். இது தொடர்பாக என்டிடிவிக்கு அவர் அளித்துள்ள விளக்கத்தில், “எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக 60 பேருந்துகளை வாடகைக்கு எடுத்தோம். பேருந்துகளில் எரிபொருள் நிரப்புவதற்காக பணம் மற்றும் பேருந்துகளில் வந்தவர்களுக்கு உணவு, குடிநீர் போன்றவை கொடுக்கும்போது எடுக்கப்பட்ட காட்சிதான் அது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கூவத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்களுக்கு பணம், தங்கம் கொடுக்கப்பட்டதாக கனகராஜ் பேசிய வீடியோவை டைம்ஸ் நவ் ஆங்கிலத் தொலைக்காட்சி சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்த விழாவுக்குத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்துவரப் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon