மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 26 பிப் 2020

ஊடகத் துறையில் பெருகும் வேலைவாய்ப்பு!

ஊடகத் துறையில் பெருகும் வேலைவாய்ப்பு!

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதால், அடுத்த ஐந்தாண்டுகளில் எட்டு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாகச் சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியத் தொழில் கூட்டமைப்பு மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் நடத்திய ஆய்வின் முடிவில் இந்தியாவில், டிஜிட்டலால் இணைக்கப்பட்ட பார்வையாளர்கள் அதிகரித்துவருவதால் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ’நுகர்வோர்களின் தேவை அதிகரிப்பால் ஊடகத் துறையானது தொழில்முறை, டிஜிட்டல் தடைகள் உள்ளிட்டவற்றில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் ஏழு முதல் எட்டு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். இத்துறையின் அபரிமிதமான வளர்ச்சியால், தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு திறன்கொண்ட ஆட்களின் தேவை அதிகரிக்கும். மேலும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தத் துறை மிகப்பெரும் மாற்றத்தைச் சந்திக்கும்.’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து இந்தியத் தொழில் கூட்டமைப்பின் பொது இயக்குநர் சந்திரஜித் பேனர்ஜி கூறுகையில், “படைப்பாளிகள், கதாசிரியர், தொழில்நுட்பச் சேவை வாங்குவோர் ஆகியோருக்கு டிஜிட்டல் துறையில் முன்பு இல்லாத அளவுக்கு இனி வரும் காலங்களில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இளம் இந்தியாவை உருவாக்கும் இந்த ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் உள்ள எண்ணற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள திறமை மட்டும் இருந்தால் போதுமானது” என்று கூறியுள்ளார்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon