மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஏப் 2020

பிரபல இந்தி நடிகர் சசி கபூர் மறைவு!

பிரபல இந்தி நடிகர் சசி கபூர் மறைவு!

பழம்பெரும் இந்தி நடிகர் சசி கபூர் உடல்நலக் குறைவால் நேற்று (டிசம்பர் 4) மாலை காலமானார். அவருக்கு வயது 79.

கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சசி கபூரை நேற்று முன்தினம் நெஞ்சு எரிச்சல் காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானதாக நடிகர் மோகித் மார்வா ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார்.

பழம்பெரும் நடிகர் பிருத்விராஜ் கபூரின் இளைய மகன் சசி கபூர். பிரபல நடிகரும் இயக்குநருமான ராஜ் கபூர் மற்றும் ஷமி கபூர் ஆகியோரின் தம்பியும் ஆவார். பாலிவுட் திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்ந்த சசி கபூர், 60 மற்றும் 70ஆம் ஆண்டுகளில் இந்தியில் மிகவும் பிரபலமாக விளங்கியவர்.

கொல்கத்தாவில் பிறந்த சசி கபூர் தனது குழந்தை பருவத்திலேயே (1940) சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார். 'தீவார்', 'சில்சிலா', 'சத்யம் சிவம் சுந்தரம்' உள்ளிட்ட 160 படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமின்றி, ஆறு படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். ஆறு படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதோடு, இரண்டு படங்களை இயக்கியும் இருக்கிறார். மூன்று முறை தேசிய விருதுகள், பிலிம்பேர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் பத்மபூஷண் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

அவரது மறைவு குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “சசி கபூரின் மறைவு செய்தி கேட்டு வருந்துகிறேன். அவர் இந்திய மற்றும் சர்வதேச படங்களில் திறமையான நடிப்பினால் நன்கு அறியப்பட்ட நடிகர். இந்திய சினிமாவுக்கு தயாரிப்பாளர் மற்றும் நாடக இயக்கத்தில் முக்கிய பங்குவகித்த வகையிலும் அவரது பணி பாராட்டுக்குரியது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்ட இரங்கல் செய்தியில், “சசி கபூரின் மறைவு செய்தி வேதனை அளிக்கிறது. எண்ணற்ற திரைப்படங்களில் அவர் நடித்துள்ள வேஷங்கள் அவரை நீண்ட காலம் நம் நினைவில்வைக்கும். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் சசி கபூரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon