மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 28 நவ 2017

டிசம்பர் 1முதல் கனமழை!

டிசம்பர் 1முதல் கனமழை!

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் போன்ற கடலோர மாவட்டங்களில் இரு தினங்களாக மழை பெய்துவருகிறது.

இது குறித்து வானிலை மைய துணை இயக்குநர் ஸ்டெல்லா கூறும்போது, “நேற்றைய (நவம்பர் 27) நிலவரப்படி, வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனமாகி, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி, கேரளா அருகே அரபிக் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது. அதேநேரம், வங்கக் கடலின் தென் மேற்கில், தமிழகம், இலங்கை இடையே, புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில், கடலோர பகுதிகளில், இன்று(நவம்பர் 28) மிதமான மழை பெய்யும். சென்னை உட்படக் கடலோர நகரங்களில், சில இடங்களில், கன மழை பெய்யலாம்” எனத் அவர் தெரிவித்தார்.

இந்திய வானிலை மையம்:

வங்கக் கடலில், அந்தமான் அருகே, காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை(நவம்பர் 29) மறுநாள் உருவாகும். தமிழகத்தின் வட கிழக்கு கடலோர மாவட்டங்களான, கடலூர், நாகை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும். அதனால், வரும், 30ஆம் தேதி முதல், தமிழக கடலோர மாவட்டங்களில், மிதமான மழை தொடங்கும். டிசம்பர் 1 ஆம் தேதி முதல், படிப்படியாகக் கன மழையாகி, டிசம்பர் 5 ஆம் தேதி வரை தொடர்ந்து பெய்யும் என, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் :

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை இருக்கும். அதே சமயம் அடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டு இருக்கும் குறைந்தழுத்த தாழ்வு நிலை நாளை(நவம்பர் 29) அல்லது நாளை மறுநாள் கன்னியாகுமரி கடல் நோக்கி நகரலாம். அப்படி நகரும்பட்சத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். பாபநாசம் போன்ற பகுதிகளில் கன மழை பெய்யும். தொடர் மழை இருக்கும்.

அடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. எந்தத் திசையை நோக்கி நகரும் என்பது பற்றி தற்போது கூற முடியாது. தெற்கு அந்தமானில் இருந்து வடமேற்கு திசையை நோக்கி நகருவதற்கான வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில், 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம், 12, சென்னை விமானநிலையம், சீர்காழி, 10, காஞ்சிபுரம், 9, வேதாரண்யம், 8, பூந்தமல்லி, கொளப்பாக்கம், சிதம்பரம், 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

செவ்வாய், 28 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon