பைனான்சியர் அன்புச் செழியன் மீதான புகாரை வாபஸ் வாங்கியது ஏன் என்பது குறித்து இயக்குநர் சி.வி.குமார் விளக்கமளித்துள்ளார்.
மாயவன் திரைப்பட சர்ச்சை தொடர்பாக அன்புச் செழியன் மீது காவல்துறை ஆணையாளரிடம் சி.வி.குமார் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் முன்னிலையில் ஒரு புகார் மனுவை அளித்தேன். அதில், எனது 'மாயவன்' திரைப்படத்தை வெளியிடக் கோபுரம் பில்ம்ஸ் நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் பணத்துக்காக நான் அளித்த ஆவணங்களைத் திருப்பித்தர வேண்டும் என்றும் கோரியிருந்தேன்.இந்த புகார் தொடர்பான விசாரணையின்போது காவல் அதிகாரிகளிடமிருந்து இன்னும் சில ஆவணங்கள் கேட்கப்பட்டன அவற்றையும் கொடுத்திருந்தேன்.
இந்த நிலையில், இன்று (நவ.27) கோபுரம் பில்ம்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் மாயவன் திரைப்படத்தை வெளியிடுவதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்கினர். ரவிபிரசாத் லேபில் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல் பணத்துக்காக கொடுக்கப்பட்ட ஆவணங்களைத் திரும்பத் தருவதாகவும் உறுதியளித்தனர். எனவே, நான் அளித்த புகாரின் நோக்கம் நிறைவேறியதால் இந்தப் புகார் அர்த்தமற்றதாக மாறிவிடுகிறது. ஆகையால் இந்த சூழ்நிலையின் அடிப்படையில் நான் புகாரை வாபஸ் பெறுகிறேன். மாயவன் திரைப்படத்தை விரைவில் வெளியிடும் பணியில் இருக்கிறோம். எல்லாத் தடைகளில் இருந்தும் நாங்கள் மீளவும் வளரவும் எங்களுக்கு ஆதரவு அளியுங்கள். நன்றி” என்று சி.வி.குமார் குறிப்பிட்டுள்ளார்.