மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

சபரிமலையில் 15 லட்சம் பேர் முன்பதிவு!

சபரிமலையில் 15 லட்சம் பேர் முன்பதிவு!

சபரிமலையில் இணையதள முன்பதிவில், 12 நாட்களில் 3 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாகவும், 15 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டது. கோயில் நடை நவம்பர் 16ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை திறந்திருக்கும்.

கேரள காவல் துறை சார்பில், கட்டணம் இல்லாத விர்சுவல் க்யூ என்னும் ஆன்லைன் முன்பதிவு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் நேர்வழி தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து காலதாமதம் இல்லாமல் தரிசனம் செய்கின்றனர்.

இந்த ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை 3 நாட்களில் 4 லட்சம் பேர் முன்பதிவு செய்தனர். நவம்பர் 16ஆம் தேதி முதல் 27 வரையிலான 12 நாட்களில் 3 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மண்டல - மகரவிளக்கு சீசனில் மொத்தம் 15.50 லட்சம் பேர் இந்த முறையில் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் 15 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இனி 50 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு செய்தவர்கள் பம்பையில் ராமமூர்த்தி மண்டபத்தில் செயல்படும் அலுவலகத்தில் அடையாள அட்டையைக் காட்டி கூப்பன் பெற்று செல்ல வேண்டும்.

இவர்கள் மரக்கூட்டத்தில் இருந்து சரங்குத்தி செல்லாமல் சந்திராங்கதன் சாலை வழியாகப் பெரிய நடைப்பந்தல் சென்று 18ஆம் படியேற முடியும்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் டிசம்பர் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை 3 நாட்களும், மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலும் நேர்வழி தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவிற்குக் கட்டணம் ஏதும் இல்லை. நடப்பாண்டில் 16 லட்சம் பேருக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 28 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon