மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 28 நவ 2017

நகை மற்றும் ரத்தினங்கள் துறைக்குச் சலுகை!

நகை மற்றும் ரத்தினங்கள் துறைக்குச் சலுகை!

இந்தியாவின் நகை மற்றும் ரத்தினங்கள் துறையை ஊக்குவிக்க புதிய சலுகைத் திட்டம் ஒன்றை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

நகை மற்றும் ரத்தினங்கள் துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஏற்றுமதியை மேம்படுத்தவும் மத்திய அரசு முயன்று வருகிறது. இத்துறையை மேம்படுத்தும் முயற்சியில் மத்திய அரசானது அத்துறையினருடன் ஆலோசித்து வருகிறது. தங்கத்தை இறக்குமதி செய்வதற்குத் தற்போது 10 சதவிகித வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதை 4 சதவிகிதமாகக் குறைக்க வேண்டுமென்று நகை மற்றும் ரத்தினங்கள் மேம்பாட்டுக் கவுன்சில் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அளவுக்கு அதிகமாகத் தங்கத்தை இறக்குமதி செய்யும்போது அது நடப்பு கணக்குப் பற்றாக்குறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசு கூறுகிறது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு மேலும் கூறுகையில், “வருகிற பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை நமக்கு நேரம் உள்ளது. அதற்குள் நகை மற்றும் ரத்தினங்கள் துறை மேம்பாட்டுக்கான சலுகைத் திட்டம் வடிவமைக்கப்படும். இத்துறையை மேம்படுத்தும் பொருட்டு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நகை மற்றும் ரத்தினங்கள் பூங்காக்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், இத்துறையில் உள்ள தொழில்நுட்ப அம்சங்களை மேம்படுத்தவுள்ளோம். இறக்குமதி செய்யப்படும் தங்கத்தை மேலும் மெருகூட்டி அவற்றை ஏற்றுமதி செய்வதில் அதிக கவனம் செலுத்தப்படும். எனவே ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது அவசியமாகிறது. எங்களது வர்த்தக அமைச்சகம் அதற்கு ஆதரவளிப்பதாகவே உள்ளது” என்று கூறினார்.

செவ்வாய், 28 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon