மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

ராமானுஜரை ஏங்க வைத்த ஈரங்கொல்லி!

 ராமானுஜரை ஏங்க வைத்த ஈரங்கொல்லி!

விளம்பரம்

ராமானுஜரின் இரு திருமேனிகளின் சரிதையைப் பார்த்தோம். ராமானுஜர் வைணவத்தின் ஒன்பதாவது ஆச்சாரியராக இருந்தாலும்... ஓங்கி நிற்கும் ஆச்சாரியராக இருப்பது பற்றி பார்த்தோம்.

ராமானுஜ காதையில் அனேக இடங்களை தரிசித்துவிட்டோம். சற்றே திரும்பிப் பார்க்கும்போது விட்டுப் போன சில விசேஷங்களைப் பார்ப்பதில் தவறில்லை.

அப்படித்தான் நாம் ஈரங்கொல்லியிடத்தில் ராமானுஜர் கற்ற பாடத்தையும்.... தனக்குப் பிள்ளைகள் இல்லையே என்று ராமானுஜர் ஏங்கிய ஒரு தருணத்தையும் பதிவு செய்கிறோம். ராமானுஜர் யதிகளின் ராஜர்.

ராமானுஜருக்கு இளவயதிலேயே திருமணம் நிறைவுற்றபோதும் அவர் தனது மனைவி தஞ்சமாம்பாளுடன் இல்வாழ்க்கையைத் தொடரவில்லை. வைணவ சித்தாந்தத்தை பரப்புவதிலேயே குறியாக இருந்தார் ராமானுஜர். அதுவும் ராமானுஜரின் வர்ண பேதம் கடந்த வைணவத்தை அவரது மனைவி தஞ்சமாம்பாள் விரும்பவில்லை. இந்த இடத்தில் தஞ்சமாம்பாளையும் நாம் மிகுதியாக குறை கூறிவிட முடியாது. வர்ணாசிரம கட்டுப்பாட்டுக்குள் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட அந்த பெண்ணுக்கு, ராமானுஜரின் செய்கைகள் மிரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. அவர் தனது தந்தை வீட்டில் என்ன செய்தாரோ அதையேதான் புக்ககத்திலும் செய்தார். எனவே தஞ்சமாம்பாளை நாம் எதிர்மறை சக்தியாக கருத இடமில்லை.

அதே நேரம் ராமானுஜர் சன்னியாசம் ஏற்கப் போவதாக முடிவெடுத்துவிட்ட நிலையில் அந்த சிறு பெண்ணின் உணர்வலைகள் என்ன மாதிரி இருந்திருக்கும் என்பதையும் நாம் கருத்தில் கொண்டாக வேண்டும்.

ஆக ராமானுஜர் சந்நியாசியாகி பிற்காலத்தில் யதிகளின் ராஜாவாகவும் ஆகிவிட்டார். அதாவது சந்நியாசிகளுக்கெல்லாம் ராஜனாகவும் ஆகிவிட்டார். ஆனபோதும் ராமானுஜரின் அடிமனதுக்குள் ஒரு சின்ன வருத்த இழை ஓடிக் கொண்டுதானிருக்கிறது. நாமும் பிள்ளைகள் பெற்று வளர்க்கவில்லையே என்ற வருத்த இழைதான் அது.

ஆனால் அதையும் ராமானுஜர் எப்போது உணர்கிறார்?

தன்னை நாடி பல குடும்பஸ்தர்கள் பிள்ளை குட்டிகளோடு வரும்போது அதுபற்றி யோசித்திருக்கிறாரா என்றால் இல்லை. தனது சிஷ்யர்கள் எல்லாம் குடும்பத்தினராக இருந்தபோது அதுபற்றி யோசித்திருக்கிறாரா என்றால் இல்லை.

பின் எப்போது, ராமானுஜர் தனக்குப் பிள்ளைகள் இல்லையே என்று ஏங்கியிருக்கிறார்?

நம்மாழ்வாரின் பெயரால் விளங்குகிற ஆழ்வார் திருநகரிக்கு ராமானுஜர் செல்லும்போது அங்கே தாமிரபரணியில் நீராடிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே ஒரு ஈரங்கொல்லி துணி துவைத்துக் கொண்டிருக்கிறார். துணிகளைத் துவைத்து அதன் ஈரத்தைக் கொல்லும் வகையில் காய வைக்கும் சலவைத் தொழிலாளர்களை தான் ஈரங்கொல்லிகள் என்று அழைக்கிறார்கள். அப்படி ஓர் ஈரங்கொல்லி ராமானுஜரைப் பார்த்து தனது துணி துவைக்கும் வேலைகளை விட்டுவிட்டு வணங்குகிறார்.

ராமானுஜரின் திருவடிகளில் விழுந்த அந்த ஈரங்கொல்லி, ‘சுவாமி தங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். தங்கள் திருவடிகளில் விழுந்து ஆசி வாங்க வேண்டும் என்று விரும்பினேன்’ என்று சொல்ல ராமானுஜரும் புன்னகையோடு அவரை ஆசீர்வதித்தார்.

பின் ராமானுஜர் புறப்படத் தயாராகையில், ‘சுவாமி... எனக்கு ஒரு சிறு விண்ணப்பம்’ என்று தயங்கினார்.

‘சொல்லப்பா...’என்று ராமானுஜர் கனிவோடு கவனம் குவித்தார்.

அப்போது அந்த ஈரங்கொல்லி, ‘என் குடும்பத்திலுள்ள அனைவரும் தங்களின் பக்தர்கள். எனக்கு தங்களின் ஆசீர்வாதம் கிடைத்துவிட்டது. ஆனால் எனது பிள்ளைகள் இருக்கிறார்கள். இதோ பக்கத்தில்தான் துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் அழைத்து வருகிறேன். தயவுகூர்ந்து அவர்களுக்கும் ஆசி வழங்க வேண்டும்’ என்று விண்ணப்பிக்கிறார் ஈரங்கொல்லி.

அவ்வளவுதானே காத்திருக்கிறேன் வரச் சொல்’ என்கிறார் ராமானுஜர்.

அப்போது அந்த ஈரங்கொல்லி தனது பிள்ளைகளை சத்தமாக பெயர் சொல்லி அழைக்கிறார்.

‘சடகோபா வா....’ என்று சத்தமிட்டார். இதைக் கேட்டதும் ராமானுஜருக்கு ஆனந்தம். சடகோபன் என்ற பெயர் நம்மாழ்வாரின் நாமம் அல்லவா!

காரிமாறா வா... என்று அடுத்த பையனையும் பெயர் சொல்லி அழைக்கிறார். ராமானுஜர் திரும்பிப் பார்க்கிறார். ஆம். அதுவும் நம்மாழ்வாரின் இன்னொரு பெயர்.

வகுளாபரணா என்று மீண்டும் சத்தமிட்டார் அந்த ஈரங்கொல்லி. ராமானுஜரின் ஆச்சரியம் அதிகமானது. ஆம். அந்த ஈரங்கொல்லியின் மூன்றாவது பையன் பெயரும் நம்மாழ்வாரையே குறிப்பது.

சிரித்துக் கொண்டே, ‘ஏ... கடைக்குட்டி குருகூர் நம்பி.... சீக்கிரம் வா. நமது ஜீயர் வந்திருக்கிறார். வந்து கும்பிடு’ என்றார் அந்த ஈரங்கொல்லி. ராமானுஜரின் கண்களில் வைணவ ஆனந்தம் மையம் கொண்டது. காரணம் குறுகூர் நம்பி என்பதும் நம்மாழ்வாரைக் குறிப்பதுதானே...

அப்போதுதான் அந்த ஈரங்கொல்லியிடம் ராமானுஜர் பேசத் தொடங்கினார்.

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் ஒளிவிளக்காம் ஜெகத்ரட்சகன் அவர்கள் தனது தமிழ் தீபம் மூலம் வைணவ ஒளியை பரவச் செய்து வருகிறார். தொடரட்டும் அவரது தொண்டு.

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon