மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

இந்திரஜித்: உன்னைப்போல் ஒருவன்!

 இந்திரஜித்: உன்னைப்போல் ஒருவன்!

விளம்பரம்

எந்த இடமா இருந்தாலும் கடைசியா பேசுறவங்களுக்கு, நமக்கு முன்னாடி பேசுனவங்களுக்கெல்லாம் நன்றி சொல்லவும், வாழ்த்தவுமே நேரம் சரியா இருக்கும். சொந்தமா பேச நினைச்சதெல்லாம் அப்படியே கெடக்கும். எனக்கு முன்பு இந்திரஜித் பற்றி பேசுன கௌதம், கே.பி. ராசாமதி, சுதன்ஷு & ராஜ்வீர் எல்லோருமே நம்மாளுங்கதான், அதனால ஸ்ட்ரைட்டா படத்துக்கு போகலாம். சொல்ல மறந்துட்டேனே , நான் தான் கலாபிரபு. இந்திரஜித் இயக்குநர்.

இந்திரஜித் திரைப்படம் பல விஷயங்களை சாதிக்க காத்திருக்குன்னு யாராவது சொல்லிருந்தா நம்பிடாதீங்க. படம் பார்க்க வர்றவங்களை 1 மணிநேரம் 57 நிமிடங்கள் மகிழ்ச்சியா இருக்கவெச்சு வீட்டுக்கு அனுப்ப முயற்சி பண்ணிருக்கேன். எந்த எல்லைக்கு உள்ளேயும் படத்தை நிறுத்தல. இன்றைய நிலைக்கு மக்கள் தேடிப்போற ஒரு விஷயத்தை படத்துலயும் தேடிப்போறாங்க அவ்வளவு தான். அது வைரமோ, தங்கமோ இல்லை. அதைமீறிய ஒரு பொருளா இருக்கும்.

அப்படிப்பட்ட பொருளுக்காக போராடுற ஒரு கேரக்டர் எப்படி இருக்கும்னு யோசிச்சு அப்பறம்தான் இந்திரஜித் உருவாக்கப்பட்டான். அந்த கேரக்டர் ஒரு சுத்தமான ஆத்மாவா இருக்கணும்னு எனக்கு நானே கண்டிப்பா முடிவு பண்ணிட்டேன். நீ எப்படி நடத்தப்படணும்னு விரும்புறியோ, மத்தவங்களையும் அப்படியே நடத்துன்னு சொல்றதை பக்காவா ஃபாலோ பண்ற ஒரு கேரக்டர் தான் இந்திரஜித். அந்த கேரக்டரை பண்றதுக்கு குழந்தை முகம் கொண்ட கௌதம் தான் சரியானவரா இருப்பாருன்னு தோணுச்சு. ரொம்ப சந்தோஷமா, எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்க ஒரு கேரக்டர் அவர். அதேமாதிரி எல்லாரும் இருந்துட்டா பிரச்னையே இல்லை. பெரியவங்க தான் அப்படி இல்லைன்னு பாத்தா, சிரிப்புக்கு உயிர்கொடுக்குற குழந்தைகள்கிட்டவும் அது இல்லை.

குழந்தைகளுக்கான ஒரு நேரடி படம் வந்து எத்தனை வருஷம் ஆகுது சொல்லுங்க பார்க்கலாம். முந்தய தலைமுறைக்கு மைடியர் குட்டிச்சாத்தான் மாதிரியான படங்கள் இருந்தது. இந்த தலைமுறைக்கு குழந்தைகளுக்கான படம்னா, அதுவும் அவங்க கஷ்டப்படுற மாதிரிதான் இருக்கு. அதெல்லாம் இல்லாம குழந்தைங்க படத்துக்கு வந்து சிரிச்சு, பிரம்மிச்சு, கொண்டாடி, கலைஞ்சு போகணும் வீட்டுக்கு. அதுக்காக தான் இந்த அட்வெஞ்சர் ஆக்‌ஷன் படம். குழந்தைங்க சிரிக்கிறதை பார்க்குறதே தனி சந்தோஷம் தான். கிஃப்ட் கொடுக்குறதே, அதைப் பிரிச்சு பார்க்கும்போது அவங்க முகத்துல ஏற்படுற சந்தோஷத்தைப் பார்த்து நாம சந்தோஷப்பட தானே. அந்த சந்தோஷத்தைக் கொடுக்கவும், ரசிக்கவும் ஆள் இல்லையோன்னு தோணுச்சு. இங்க விழுந்த இடைவெளியை இந்திரஜித் தீர்க்கலைன்னாலும், வேற யாராவது வந்து தீர்த்தே ஆகணும்.

குழந்தைகளுக்கான படம்னு சொன்னதும் ஏதோ மேஜிக் எல்லாம் இருக்கும்னு எதிர்பார்க்கவேண்டாம். உண்மையாவே இந்தியாவுக்குள்ள இருக்க பல முக்கியமான இடங்கள்ல படமாக்கியிருக்கோம். நான் பொதுவாவே அட்வெஞ்சர் ரைடு போறதை வழக்கமா வெச்சிருக்கேன். அதனால் எந்தெந்த ஷாட் எங்கெங்க வைக்கலாம்னு பல மாசமா நானே நேர்ல போய் செலெக்ட் பண்ணிருக்கேன். இப்படி நான் தேடித்தேடி படத்துல பல விஷயங்கள் சேர்த்திருந்தாலும், என்னையே ஆச்சர்யப்படுத்துற அளவுக்கு படத்துல வந்து சேர்ந்தார் சுதன்ஷு பாண்டே. பல பெரிய நடிகர்கள் கைக்கு போன இந்த கேரக்டர், ஒவ்வொரு முறையும் டிராப் செய்யப்பட்டபோதும் இது சுதன்ஷு கைக்கு வர்றதுக்காக வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்குன்னு தெரியாம போச்சு. ஒரு வொர்க்ல கமிட் ஆகிட்டா அதுக்கு எந்தளவுக்கு ஈடுபாடு காட்டமுடியும்னு சுதன்ஷுகிட்ட இருந்து தெரிஞ்சுக்கலாம். அவருடைய பெயர் மறந்துட்டு கபில் ஷர்மாவா மாறிடுவார். மெயின் டீம்ல சுதன்ஷு சீனியர் நடிகர். இன்னொருத்தர் இருக்கார் ஜூனியர் தான் ஆனா எல்லா சீனியரையும் ஆச்சர்யப்படுத்தியவர்.

மியூசிக் டைரக்டர் கே.பி முதல் படத்துலயே எப்படி இவ்வளவு வொர்க் பண்ணிருக்காருன்னு யாரைப் பார்த்தாலும் கேள்வியா இருக்கு. ஒரே வரில சொல்லணும்னா, வாங்காம வராது; இல்லாமலும் வராது. அவருக்குள்ள இருக்க திறமையைத் திறக்கும் வழியை மட்டும் காட்டிவிட்டுட்டோம்னா போதும் எல்லாம் தானா நடந்துடும். பின்னணி இசைல பிச்சு எடுத்திருக்காரு. பெரிய மியூசிக் டைரக்டருக்கு உண்டான எல்லா அம்சங்களும் இருக்குறதால, இந்திரஜித் ரிலீஸானதும் அவருக்கு நல்ல இடம் கிடைக்கும். நேரம் பார்க்காமல் உழைக்கும் அவருடைய தன்மை அவருக்கு உண்டான இடத்தை பெற்றுக்கொடுக்கும். சக்கரக்கட்டி படத்துல ராசாமதியைப் பார்த்தமாதிரி கே.பி இருக்கார்.

ராசாமதியை நான் ராஜான்னு தான் கூப்பிடுவேன். அவன் எனக்கு அவ்வளவு நண்பன். அவன்கிட்ட ஒரு வேலையைக் கொடுத்துட்டோம்னா நாம அது நடந்துருக்குமான்னு யோசிக்கவேண்டிய அவசியமே இருக்காது. ஷாட் சொல்லிட்டு நாம இல்லைன்னா கூட அவ்வளவு ஈடுபாட்டோட அந்த வசனத்துக்கு தேவையான அளவுக்கு ஷாட் வெச்சிருப்பாப்ல. மானிட்டர்ல பார்த்துட்டு கொஞ்சம் உள்ள வா, வெளிய போ இப்படி எதுவும் சொல்லத் தேவையே இருக்காது. அப்பப்ப இந்த ஷாட்டுக்கு டையலாக் என்ன சொல்லுன்னு கேப்பான். உனக்கும் வசனத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டா, சொல்லு சொல்லும்பான். என்னன்னு பார்த்தோம்னா அந்த வசனத்துக்கு ஏற்ற மாதிரி கேமராவுடைய மூட் மாத்தி வெச்சிருப்பான். இப்ப இல்லை, சக்கரக்கட்டில இருந்தே அப்படித்தான். இப்படிப்பட்டவங்க கூட வேலை செய்யும்போது நாம டென்ஷன் ஆகவேண்டிய அவசியமே இருக்காது. இவங்களுடைய ஒரிஜினாலிட்டி என்னவோ அது இருந்தா போதும்னு நினைச்சேன்.

சக்கரக்கட்டி படத்துல எல்லா கேரக்டரும் என்னை மாதிரியே இருந்ததா சொன்னாங்க. அதனால, இந்திரஜித் படத்துல தெளிவா இருந்தேன். எல்லாத்தையும் மீறி, லவ் பண்ணிதான் சினிமாக்கு வர்றோம். இங்க வந்து அந்த லவ் இருக்க வரைக்கும் எல்லா வேலையையும் சரியா செய்யலாம். ஆர்வமா செய்யலாம். நாம அந்தமாதிரி ஒரு மகிழ்ச்சியான மனநிலைல படத்தைப் பண்ணா தான் அது தியேட்டர்ல பார்க்கும் மக்களுக்கு போய் சேரும். படங்களைப் பொருத்த வரைக்கும் நான் இரண்டு விதமா பார்க்கிறேன். படம் ஷூட் போறதுக்கு முன்னாடி எப்படி வரணும்னு பல கனவு இருக்கும். எடுத்து முடிச்ச பிறகு அதுல என்ன இருக்குன்னு எங்களுக்கு தெரியும். அது எங்களுக்கு தெரிஞ்சது மட்டுமில்லை. ட்ரெய்லர்ல இருந்தது தான் படத்துல இருக்கு. படத்துல இருக்குறதை மட்டும் தான் ட்ரெய்லர்ல கட் பண்ணிருக்கோம். வேகமா, ஆர்வமா படம் போகும். முகச்சுளிவு எங்கயுமே இருக்காது. வழக்கமான சினிமாத்தனத்துக்கு வெளிய போய் தான் இந்தக்கதையையே எடுத்திருக்கோம். ஒரு புது உணர்வைக் கொடுக்கும்னு சொல்லலாமே தவிர, புதுக்கதைன்னு சொல்லமாட்டேன். இந்த உலகத்துல புதுசுன்னு எதுவுமே கிடையாது. எல்லாம் ஆல்ரெடி எங்கயோ யாராலயோ எடுக்கப்பட்டது தான். படத்தை தியேட்டர்ல போய் பாருங்க. கண்டிப்பா சர்ப்ரைஸ் காத்திருக்கு. படம் (நவம்பர் 24) இன்று ரிலீஸ்.

விளம்பர பகுதி

வெள்ளி, 24 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon