மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

கிடைத்தது சின்னம்: அதிமுகவினர் கொண்டாட்டம்!

கிடைத்தது சின்னம்: அதிமுகவினர் கொண்டாட்டம்!

ஒருங்கிணைந்த அதிமுகவினருக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கித் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்ன விவகாரம் தொடர்பாக அக்டோபர் 31க்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இதனை நவம்பர் 10ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8ஆம் தேதி வரை எட்டுக் கட்டங்களாக விசாரணை நடைபெற்றது. அதில் ஒருங்கிணைந்த ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணியினர், தினகரன் ஆகிய இரு தரப்பினரும் தாங்கள்தான் உண்மையான அதிமுக, தங்களுக்குத்தான் இரட்டை இலைச் சின்னம் வேண்டும் என்று காரசாரமான வாதங்களை முன்வைத்தனர். இறுதிக் கட்டமாக 8ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் தீர்ப்பை நாள் குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. வாதங்கள் மீதமிருந்தால் எழுத்துபூர்வமான தாக்கல் செய்யயும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இன்று ( நவம்பர் 23) 12 மணியளவில் தினகரன் தரப்புக் கோரிக்கையை நிராகரித்து, ஒருங்கிணைந்த அணியினருக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது. ஆனால் தேர்தல் ஆணையத்திலிருந்து முறைப்படி அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இது தொடர்பாகக் கருத்து தெரிவித்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "ஒன்றரைக் கோடித் தொண்டர்கள் மகிழும் வண்ணம் தீர்ப்பு வெளியாகியுள்ளது. நியாயம் எங்கள் பக்கம் இருப்பதால்தான் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக வந்துள்ளது. தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே தினகரன் தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் இரட்டை இலை தொடர்பாகத் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே எப்படி ஊடகங்களில் செய்தி வெளியானது என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சின்னம் கிடைப்பதற்கு முன்பே கருத்து தெரிவித்தது தொடர்பாக விளக்கம் அளித்த முதல்வர் தரப்பு, “பத்திரிகையாளர்கள் உறுதியாகக் கூறியதன் அடிப்படையிலேயே இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரியுடன் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்ததால் இரட்டை இலை தொடர்பான ஆணை வந்ததா என்று தெரியவில்லை. கூட்டம் முடிந்த பிறகே தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்று தெரியவந்தது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி மார்ச் 22ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்தும், எடப்பாடி - பன்னீர் அணிக்குத்தான் இரட்டை இலைச் சின்னம் என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் 3 மணியளவில் வெளியிட்டது. சுமார் 83 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் வருமாறு:

“பிரமாணப் பத்திரங்கள், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளிற்றவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் சின்னம், கட்சிக் கொடி, அதிகாரபூர்வமான கடிதம் உள்ளிற்றவற்றை இனி ஒருங்கிணைந்த அணியினரே பயன்படுத்தலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் ஒருங்கிணைந்த அணியினருக்கே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் மொத்தமுள்ள 2128 பொதுக்குழு உறுப்பினர்களில் 1877 உறுப்பினர்களின் ஆதரவு ஒருங்கிணைந்த அணியினருக்கு உள்ளது என்றும், முதல்வர் அணிக்கு 111 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது; தினகரன் அணிக்குத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் உட்பட 20 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது என்றும்,எம்.பி.க்களில் தினகரன் அணிக்கு 6 பேரின் ஆதரவே உள்ளது என்றும், முதல்வர் தரப்புக்கு 42 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கிறது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக இனி ஒருங்கிணைந்த எடப்பாடி - பன்னீர் அணிக்குச் சொந்தமாகியுள்ளது.

அதிமுக என்ற பெயரை இனி முதல்வர் அணியினர் பயன்படுத்தலாம். அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக்கூட ஜெ.தீபா இல்லாத காரணத்தால் அவரது வாதம் ஏற்கப்படவில்லை. ஜெயலலிதா உள்ளிட்ட 13 பொதுக்குழு உறுப்பினர்கள் தற்போது உயிருடன் இல்லை. அதிமுக பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை மதுசூதனன் தலைமையிலான அணி பயன்படுத்தலாம். பிரமாணப் பத்திரம் தொடர்பாக தினகரன் அணியினர் தெரிவித்த குற்றச்சாட்டில் உண்மையில்லை. சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளில் பிரச்சினை ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட முடிவே தற்போது எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளதால், அவர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த இயலாது,கட்சியின் பொதுக்குழுவையே தொண்டர்களின் பிரதிநிதியாகக் கருத முடியும். பல பிரமாணப் பத்திரங்களைப் போலி என்று தினகரன் தரப்பு குற்றம் சாட்டினாலும் பெரும்பான்மையில் எந்த மாற்றமும் இல்லை. கட்சியின் உச்சபட்ச அதிகாரம் வாய்ந்த அமைப்பின் ஆதரவைப் பொறுத்தே பெரும்பான்மை குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது”.

தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பையடுத்து தமிழகம் முழுவதுமுள்ள அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர். இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், “தொண்டர்களின் விருப்பப்படி தங்கள் அணிக்கே சின்னம் கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். மூத்த தலைவர் மதுசூதனன், “இனி முதல்வரும், துணை முதல்வரும் இரட்டை இலையாகச் செயல்படுவர்" என்று தெரிவித்துள்ளார்.

"தேர்தல் ஆணையத்தில் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளோம்" என்று தினகரன் அணியைச் சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்.

வியாழன், 23 நவ 2017

அடுத்ததுchevronRight icon