மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

சதி செய்தவர்களுக்கு சம்மட்டி அடி!

சதி செய்தவர்களுக்கு சம்மட்டி அடி!

சின்னம் கிடைத்தது குறித்து, அதிமுகவை உடைத்து விடலாம் என்று சதி செய்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இருவரும் கூட்டாகப் பேட்டியளித்துள்ளனர்.

இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி - பன்னீர் தரப்புக்குக் கிடைத்ததையடுத்து, அதிமுகவினர் தமிழகம் முழுவதும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள் பட்டாசு வெடித்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும்,மதுசூதனன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் வருகை தந்தனர். அங்கு எடப்பாடி - பன்னீர் வெளியிட்ட கூட்டறிக்கையை வாசித்த அமைச்சர் ஜெயக்குமார், "ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் நாங்கள்தான். இந்த வெற்றியை ஜெயலலிதாவுக்குக் காணிக்கையாக்குகிறோம்" என்று தெரிவித்தார். வெற்றியைப் பரிமாறிக்கொள்ளும் விதமாக முதல்வரும் துணை முதல்வரும் இனிப்புகளை வழங்கினர்.

பின்னர் முதல்வரும், துணை முதல்வரும் கூட்டாக அளித்த பேட்டியில், "இரட்டை இலை விவகாரத்தில் பெற்ற வெற்றியைத் தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறோம். 5.12.2016 அன்று தினகரன் அதிமுகவின் உறுப்பினராகக்கூடக் கிடையாது. அதிமுகவை உடைத்துவிடலாம் என்று நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி கிடைத்துள்ளது. தேர்தல் ஆணையம் தர்மத்தை, நீதியை, உண்மையை நிலைநாட்டியுள்ளது. நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளோம். எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கூட்டுச் சதி செய்தவர்களுக்கு இது நல்ல தீர்ப்பாக அமைந்துள்ளது"என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

துணை முதல்வர் பன்னீசெல்வம் கூறுகையில், "தொண்டர்கள் இயக்கமாக அதிமுகவை வழிநடத்தினார் ஜெயலலிதா. இந்த முழு வெற்றியை எம்.ஜி. ஆர்., ஜெயலலிதாவுக்கு அர்ப்பணிக்கிறோம். ஜெயலலிதாவின் ஆன்மாதான் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது. தீர்ப்புக்கு பின்னாலும், முன்னாலும் யாரும் இல்லை. இனி கட்சியையும், ஆட்சியையும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வோம். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே இனி நீடிப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

கூட்டம் முடிந்தபிறகு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சென்னை மெரினா கடற்கரையிலிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon