மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

மறுமணம் செய்தாலும் தொடரும் பென்ஷன்!

மறுமணம் செய்தாலும் தொடரும் பென்ஷன்!

ராணுவத்தில் வீரதீரச் செயல்களுக்கான விருது பெற்ற மறைந்த வீரர்களின் மனைவிகள் யாரை மறுமணம் செய்துகொண்டாலும் அவர்களுக்கு வழங்கப்படும் பணப் படிகள் (பென்ஷன்) தொடரும் என்று ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.

ராணுவத்தில் போரின்போதோ எதிரிகள் தாக்குதலின்போதோ துணிச்சலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான விருது வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெறும் வீரர்களின் மனைவிகளுக்குப் பணப் படிகள் சார்ந்த சலுகை வழங்கப்படுகிறது.

வீரரின் மனைவி உயிரோடு இருக்கும்வரை அல்லது மறுமணம் செய்து கொள்ளும்வரை இந்த பணப் படிகள் வழங்கப்படும். மறுமணம் செய்தால் சலுகை கிடைக்காது என்ற விதி இருந்தாலும், இறந்த வீரரின் சகோதரரை மறுமணம் செய்துகொண்டால் குடும்ப ஓய்வூதியத்துக்கு அவர் தகுதியுடையவர் ஆவார் என்னும் விதி இது நாள்வரை இருந்தது. அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீரச் செயல் விருது பெற்ற இறந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு அவர்கள் யாரை மறுமணம் செய்து கொண்டாலும் பணப் படிகள் சலுகை தொடரும் என்றும் மனைவி இறக்கும் வரை சலுகைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப விதிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon