மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் தில்லுமுல்லு?

உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் தில்லுமுல்லு?

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலின்போது, மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனால், அங்கு மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடிவுசெய்யப்பட்டது.

முதல் கட்ட வாக்குபதிவு, உ.பி.யில் உள்ள 24 மாவட்டங்களில் நேற்று (நவம்பர் 22) நடந்தது. மீரட் மாநகராட்சியில் நடந்த வாக்குப்பதிவின்போது, ஒரு வாக்காளர் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களித்தபோது, அது பாஜகவுக்குப் பதிவானதாகத் தெரிய வந்திருக்கிறது. இது குறித்து அவர் புகார் தெரிவித்ததும், வாக்குச்சாவடி அதிகாரிகள் அந்த இயந்திரத்தைச் சோதனையிட்டனர். அப்போது, எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் பதிவானதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த எதிர்கட்சியினர் தேர்தலில் தில்லுமுல்லு நடப்பதாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து, அந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தவர்கள் மீண்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.

அங்கிருந்த தேர்தல் அதிகாரி ஒருவர் இதுகுறித்துப் பேசியபோது, “இதில் தில்லுமுல்லு எதுவும் இல்லை. இது வாக்கு இயந்திரத்தில் இருந்த கோளாறுதான்” என்றிருக்கிறார்.

உ.பி. சட்டமன்றத் தேர்தலின்போதும் இதேபோல வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு நடந்ததாகப் புகார்கள் வந்தன. அதற்கான தீர்வு இன்னும் கிடைக்காத நிலையில், உள்ளாட்சித் தேர்தலிலும் அதே குரல் எழுந்திருக்கிறது. இதனால் நவம்பர் 26 மற்றும் 29 தேதிகளில் நடைபெறும் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்களின் மீது அங்குள்ள எதிர்கட்சிகளின் கவனம் குவிந்திருக்கிறது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon