மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

ஆட்சி மாற்றத்துக்கு வியூகம்!

ஆட்சி மாற்றத்துக்கு வியூகம்!

ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் ஏற்பட வியூகம் வகுப்போம் என்று திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் இன்று (நவ.23) எழுதியுள்ள கடிதத்தில், “ரேஷன் கடைகள் முன்பாக திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் தாக்கம் குறித்த செய்திகள் அறிவாலயத்தில் குவிந்துவருகின்றன. நாம் நடத்திய ஆர்ப்பாட்டம் செயலற்றுக் கிடக்கும் அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் அடிப்படைத் தேவைகளைக்கூடப் பெற முடியாமல் அல்லல்படும் மக்களின் நலன் காக்க வானுயர எழுந்த போர்க்குரல்.

நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலையை உயர்த்தி, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை கசந்து போகும்படி செய்த மாநில அரசின் செயல்பாட்டையும், மாநில அரசுக்குச் சற்றும் சளைக்காமல் மக்களை வதைப்பதில் போட்டி போடும் மத்திய அரசின் யதேச்சதிகாரப் போக்கையும் கண்டித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகள் முன்பாகவும் திமுகவினர் நடத்திய போராட்டத்தின் வெற்றிச் செய்திகள் கிடைத்துள்ளன” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

நியாயவிலைக் கடைகளை நிரந்தரமாக மூடுவதுதான் அரசின் ஒரே நோக்கம் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “தமிழக மக்களின் உணவு உரிமையைப் பறிக்கும் விதத்தில், பட்டினிச் சாவுகள் ஏற்படக்கூடிய அபாயத்தை நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது மாநிலத்தை ஆளும் ‘குதிரை பேர’ பினாமி அரசு” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

“மக்களை வஞ்சித்து, மத்திய அரசிடம் மண்டியிட்டு, சுயநலனைத் தவிர வேறெதற்கும் செயல்படாத சீர்கெட்ட அரசு நிர்வாகத்தை மாற்றிடும் வரையில் போராட்டக் களங்கள் இனியும் தொடரும்” என்று கூறியுள்ள அவர், சட்டத்தின் வழியில் ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் காண்போம். அது விரைந்து நடக்க வியூகம் வகுப்போம் எனவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon