மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

மீண்டும் விபத்தில் சிக்கிய கங்கணா

மீண்டும் விபத்தில் சிக்கிய கங்கணா

பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் மணிகர்ணிகா படப்பிடிப்பில் இரண்டாவது முறையாக மீண்டும் விபத்தில் சிக்கியுள்ளார்.

பாலிவுட் திரைப்படங்களில் சிறப்பாக நடித்துத் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் கங்கணா ரணாவத். தற்போது இவர் `மணிகர்ணிகா: தி ஜான்சி ராணி’ படத்தில் நடித்துவருகிறார். ஜோத்பூரில் நடைபெற்றுவரும் இதன் படப்பிடிப்பில் கங்கணாவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படம் ஆரம்பித்ததிலிருந்தே எல்லாச் சண்டைக் காட்சிகளையும் தானே செய்துவந்த நிலையில் தற்போது ஒரு சுவரிலிருந்து குதிரை மேல் குதிக்க முயற்சிக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வலது காலில் காயம் ஏற்பட்ட கங்கணாவைப் படக் குழுவினர் உடனடியாக ஜோத்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றனர். அங்கே சிகிச்சை பெற்றுக்கொண்ட பின் கங்கணா ஓய்விற்காக மும்பை சென்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்கனவே வாள் சண்டையின்போது கங்கணாவிற்கு விபத்து ஏற்பட்ட நிலையில் மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடித்து வரும் கங்கணாவின் நடிப்பில் வெளியாகிய குயின், சிம்ரன், ரங்கூன் போன்ற பாலிவுட் திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அவர் நடித்து வரும் மணிகர்ணிகா திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon