மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

குரங்கின் கையில் பூமாலை!

குரங்கின் கையில் பூமாலை!

இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் இணைந்த தரப்புக்கு கொடுக்கப்பட்டுள்ளதால் கட்சியும், சின்னமும் குரங்கின் கையில் சிக்கிய பூமாலையாக உள்ளது என்று தினகரன் விமர்சித்துள்ளார்.

முடக்கி வைக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னத்தை அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இணைந்த அணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (நவம்பர் 23) உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் தலையீடு உள்ளது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை என்பதற்கு இதைவிட மிகச்சிறந்த உதாரணம் வேறு இருக்க முடியாது. காரணம், கடந்த பிப்ரவரி மாதம் பன்னீர்செல்வம் தலைமையில் 12 எம்.எல்.ஏக்களும், 12 எம்.பிக்களும் தான் இருந்தார்கள். ஆனால் அன்றைக்கு அவர்கள் கொடுத்த புகாரின் பேரிலே தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கியது. ஆனால் இன்றைக்கு எடப்பாடி அணிக்கு 111 எம்.எல்.ஏக்களும், 41 எம்.பிக்களும் ஆதரவளிப்பதால் அவர்களுக்குத் தான் உரிமை உள்ளது என்று கூறியுள்ளது. அன்றைக்கு எங்களுக்கு 122 எம்.எல்.ஏக்கள் மற்றும் 37 எம்.பிக்கள் ஆதரவு இருந்தபோதும் சின்னத்தை முடக்குவதிலேயே குறியாக இருந்தார்கள்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுக இருக்கிறோம். அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதை வைத்துத்தான் சின்னம் யாருக்கு என்பதைத் தீர்மானித்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்பட்டிருக்கிறது. இதற்குப் பின்னால் மத்திய அரசின் தலையீடு இருக்கிறது. இரட்டை இலை சின்னமும், கட்சியும் குரங்குகளின் கையில் மாட்டிய பூமாலையாக இருக்கிறது. அதை நிச்சயம் நாங்கள் மீட்டெடுப்போம்" என்றார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon