மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்த ஏர்டெல்!

அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்த ஏர்டெல்!

கடந்த அக்டோபர் மாதத்தில் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா ஆகிய மூன்று நெட்வொர்க் நிறுவனங்களும் இணைந்து 47.4 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைத் தங்களது சேவைகளுக்குள் இணைத்துள்ளன.

அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெலில் 31.4 லட்சம் வாடிக்கையாளர்களும், வோடஃபோன் நெட்வொர்க்கில் 8,79,413 வாடிக்கையாளர்களும், ஐடியா நெட்வொர்க்கில் 7,13,408 வாடிக்கையாளர்களும் இணைந்துள்ளனர். 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தியா முழுவதும் 95.38 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதாகவும், இதில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களும் அடங்கும் எனவும் இந்திய செல்லுலார் ஆப்பரேட்டார் கூட்டமைப்பு (COAI) இந்த மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது.

ரிலையன்ஸ் ஜியோ வரவிற்குப் பின் தொலைத் தொடர்புச் சந்தையில், அதன் போட்டியை சமாளிக்க முடியாமல் மிகப்பெரும் நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஜியோ நிறுவனம் இலவசச் சேவைகளை வழங்கி, நாளுக்கு நாள் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து வந்த நிலையில் தற்போது இலவசச் சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளதால், அதில் இணையும் வாடிக்கையாளர்களும் குறையத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் ஜியோ நிறுவனத்தில் புதிதாக இணைந்த வாடிக்கையாளர்கள் பட்டியலை அந்நிறுவனம் அளிக்க மறுத்துவிட்டது.

இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில், ஏர்டெல் நிறுவனம், 28.52கோடி வாடிக்கையாளர்களுடன், 29.9சதவிகித சந்தைப் பங்குடன் தொடர்ந்து தனது முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து வோடஃபோன் நிறுவனம், 20.83கோடி வாடிக்கையாளர்கள் மற்றும் 21.84 சதவிகித சந்தைப் பங்குடன் இரண்டாவது இடத்திலும், ஐடியா நிறுவனம் 19.08 கோடி வாடிக்கையாளர்கள் மற்றும் 20.01 சதவிகித சந்தைப் பங்குடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon