மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை !

ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை !

இரட்டை இலை சின்னத்தை ஒருங்கிணைந்த ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியினருக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா முதல்வராக ஆசைப்பட்டதால் அதிமுக சசிகலா, பன்னீர்செல்வம் என இரு அணிகளாக பிரிந்தது. அதையடுத்து தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று இரு அணியினரும் சொந்தம் கொண்டாடியதால் கட்சியின் சின்னமும், பெயரும் முடக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் எடப்பாடி-பன்னீர் என இரு அணியினரும் ஒன்றிணைந்த நிலையில், தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். ஒருங்கிணைந்த அணியினர் தங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையத்தில் முன்வைத்தனர். அதுபோலவே தினகரன் அணியினரும் தங்களுக்குத்தான் சின்னம் சொந்தம் என்று மனு தாக்க செய்திருந்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளதால் நவம்பர் 10ஆம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த அக்டோபர் 6ஆம் தேதி சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது. எட்டு கட்டங்களாக நடைபெற்ற விசாரணையில் இரு தரப்பினரும் காரசாரமான வாதத்தை முன்வைத்தனர். நவம்பர் 8ஆம் தேதி நிறைவுபெற்ற விசாரணையின் தீர்ப்பை தேர்தல் ஆணையம் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இடையில் இரு தரப்பினரும் கடந்த 13ஆம் தேதி எழுத்துப்பூர்வமான வாதத்தை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தனர்.

இந்த சூழ்நிலையில் இன்று சின்னம் யாருக்கு என்பதற்கான தீர்ப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளதாகவும், அதில் இரட்டை இலை சின்னம் ஒருங்கிணைந்த எடப்பாடி- பன்னீர் தரப்புக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தினகரன் தரப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே கட்சி இனி ஒருங்கிணைந்த அணியினருக்கே சொந்தமாகும்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon