மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

ஓ.பி.எஸ். அணி: தொடரும் அதிருப்தி குரல்!

ஓ.பி.எஸ். அணி: தொடரும் அதிருப்தி குரல்!

அதிமுகவில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்த நிலையில், கருத்து மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இணைப்பிற்குப் பின், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களின் கை ஓங்கியுள்ளதாகவும், பன்னீர் அணியில் உள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால், முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, மைத்ரேயன் எம்.பி., அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் போன்றோர் அதிருப்தியுடன் இருந்துவருகின்றனர். அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக மதுசூதனன் வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில், மைத்ரேயன் எம்.பி, தனது ட்விட்டர் பக்கத்தில், “ அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை” என்று பதிவிட்டிருந்தார். இது எனது தனிப்பட்ட கருத்தல்ல, அதிமுக தொண்டர்களின் கருத்து என்று தெரிவித்திருந்த அவர், பன்னீர் அணியினரைப் புறக்கணிக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் மைத்ரேயன் கருத்தை ஆமோதித்துள்ளார். திண்டுக்கல்லில் இன்று (நவ.23 ) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “ மைத்ரேயன் கருத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை. எனினும் இது காலப்போக்கில் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர்களுக்கு நாவடக்கம் தேவை எனவும் அவர் குறிப்பிட்டார். அணிகள் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகப் பன்னீர் அணியினர் வெளிப்படையாகவே தெரிவித்து வருவது அதிமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon