மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

அதிமுக கோஷம்: சட்டப்பேரவை ஒத்திவைப்பு!

அதிமுக கோஷம்: சட்டப்பேரவை ஒத்திவைப்பு!

புதுச்சேரி சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மே 16-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 16-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, 6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவை கூட்டப்படும் என்ற விதிப்படி, குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று (நவ.22) தொடங்கியது. சட்டப்பேரவை வளாகத்தில் மூன்றடுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது . முத்தியால் பேட்டை தொகுதி, அதிமுக எம்.எல்.ஏ, வையாபுரி மணிகண்டன் காரை, சட்டப்பேரவை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியதால்,சட்டப்பேரவை வெளியில் பரபரப்புகள் அதிகமானது.

பின்னர் அதிமுக எம்.எல்.ஏ, அன்பழகன் வெளியில் வந்து அவரை உள்ளே அழைத்துப்போனார். முன்னதாக , நியாயவிலை கடையில் சர்க்கரை, அரிசி நிறுத்தப்பட்டது மற்றும் சத்துணவில் முட்டை நிறுத்தப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் , சர்க்கரை, அரிசி, முட்டை ஆகியவற்றைச் சீர்வரிசை போன்று தட்டில் ஏந்தி சட்டமன்றத்துக்கு எடுத்து வந்தனர்.

சபாநாயகர் வைத்திலிங்கம் திருக்குறள் வாசித்து சட்டப்பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்தார். அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக கோஷமிட்டது. பின்னர், அதிமுக மற்றும் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாகச் சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்தார். காலை 10.45 மணிக்கு துவங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 11.45 மணிக்கெல்லாம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநடப்பு குறித்து அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் கூறுகையில், முட்டை விலை தாறுமாறாக ஏறிபோய்விட்டது என்று, பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முட்டையை நிறுத்திட்டார்கள்.

ஆதிதிராவிடர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்காமல் நிறுத்திவிட்டார்கள், இலவச அரிசி மற்றும் ரேஷன் பொருள்கள் வழங்கவில்லை. மாநிலத்தின் வளர்ச்சியே பின்தங்கி விட்டது.

மக்களுக்கான ஆட்சியே நடைபெறாதபோது, சட்டமன்றத்தில் விவாதிக்க என்ன உள்ளது” என்று கேள்வியெழுப்பினார்.

இதேபோல் வெளிநடப்பு குறித்து முன்னாள் முதல்வரும் என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி கூறுகையில், “மாநில வளர்ச்சியிலும் மக்கள் நலனிலும் அக்கறையின்றி ஆளுநர் மீது மட்டுமே ஆட்சியாளர்கள் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். எல்லாவற்றிற்கும் துணைநிலை ஆளுநரை குறை கூறுவது ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon