மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

கந்துவட்டி :சட்டமும் சினிமாத்துறையும் தடுக்க வேண்டும்!

 கந்துவட்டி :சட்டமும் சினிமாத்துறையும் தடுக்க வேண்டும்!

கந்துவட்டி பிரச்சினையால் இணைத் தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில் கமல் ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கந்துவட்டி பிரச்சினையால் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்த செய்தி தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த செய்தியின் தாக்கம் தணிவதற்குள் தற்போது கம்பெனி புரொடக்சன் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக அலுவலரும் இணைத்தயாரிப்பாளருமான அசோக்குமார் பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் (நவம்பர் 21) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இதற்கு திரையுலகை சேர்ந்த அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள்” என்று பதிவு செய்திருக்கிறார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon