மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

முட்டை விலை உயர்வு தற்காலிகமே!

 முட்டை விலை உயர்வு தற்காலிகமே!

கடந்த வாரத்தில் முட்டை விலை கடும் உயர்வைச் சந்தித்ததையடுத்து, இது தற்காலிகமான உயர்வு தான் எனக் கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக முட்டை விலை குறையத் தொடங்கியுள்ளது.

உற்பத்திக் குறைவு காரணமாகக் கோழி முட்டையின் விலை வரலாறு காணாத ஏற்றத்தைச் சந்தித்தது. இதனால் நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகச் சில்லறை விற்பனைச் சந்தையில் முட்டை ஒன்றின் விலை ரூ.6 முதல் 7 வரை உயர்ந்தது. நவம்பர் 22ஆம் தேதி ஹைதராபாத்தில் இந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட ’பவுல்ட்ரி இந்தியா 2017’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தெலுங்கானா மாநிலத்தின் நிதி மற்றும் திட்டமிடல் துறை அமைச்சர் எட்டலா ராஜேந்திரன் பேசுகையில், "கோழி வளர்ப்புத் துறையில் முட்டை விலை சராசரியாக 4 ரூபாயாக இருந்தால் மட்டுமே பண்ணையாளர்களுக்கு வருவாய் கிடைக்கும். தற்போதுள்ள இந்த விலையேற்றம் தற்காலிகமான ஒன்றுதான்" என்று கூறினார். கோழிப் பண்ணையாளர் சங்கமும் முட்டை விலை உயர்வு தற்காலிகம் தான் என்று கூறியுள்ளது.

கடந்த வாரம் அதிக விலையேற்றத்தைச் சந்தித்து வந்த முட்டை, கடந்த இரண்டு நாட்களாக விலை குறையத் தொடங்கியுள்ளது. இரண்டு நாட்களில் 31 காசுகள் குறைந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக்கான கொள்முதல் விலை ரூ.4.85 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் முட்டை விலை குறைந்துள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் கூறுகின்றனர். சென்னையில் முட்டை ஒன்றின் விலை ரூ.5.40ஆக உள்ளது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon