மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

விஷால் சொல்வதில் உண்மையில்லை!

 விஷால் சொல்வதில் உண்மையில்லை!

அன்புச் செழியனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் யாருமில்லை என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கடந்த 22ஆம் தேதி தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதிருந்த கடிதத்தில் அன்புச் செழியன் பெயர் இடம்பெற்றதால், தலைமறைவான அவரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர். அன்புச் செழியனுக்கு ஆதரவாக அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், “கந்து வட்டி கொடுமையால் தான், கவுதம் வாசுதேவ் மேனன், பார்த்திபன் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அன்புச் செழியனுக்குச் சாதகமாக எம்.எல்.ஏ. வந்தாலும் அமைச்சர் வந்தாலும் விட மாட்டோம் என்றும் கூறினார். “இதுவரை அன்புச் செழியன் கைது செய்யப்படமால் இருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது. அரசு சரியாக நடக்குதா இல்லையா என்பதைப் பார்ப்போம். முறையாக இந்த விவகாரத்தில் முதல்வரைச் சந்திப்போம்" என்று பேசியிருந்தார்.

செய்தியாளர்களிடம் பேசுகையில் விஷாலுக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "விஷால் கூறுவதுபோல அன்புச் செழியனுக்கு அமைச்சர்கள் ஆதரவு உள்ளது என்பதில் எவ்வித உண்மையுமில்லை. விஷால் ஆதாரமில்லாமல் போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றியுள்ளார். அரசுக்கு நடிகர்கள் இலவச ஆலோசனை மட்டுமே தரக் கூடாது" என்று தெரிவித்தவர், "நடிகர்கள் ஆளுக்கு ஒரு கோடி என்ற வீதத்தில் 500 கோடி சுழற்சி நிதி திரட்டி சிறு தயாரிப்பாளர்களுக்கு உதவலாம்" என்ற ஆலோசனையையும் வழங்கியுள்ளார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon