மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

சென்னை சூப்பர் கிங்க்ஸ் திரும்புமா?

சென்னை சூப்பர் கிங்க்ஸ் திரும்புமா?

இந்தியாவில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட போட்டியாக ஐபிஎல் உள்ளது. கடந்த 10 வருடங்களாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் அடுத்த சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

கடந்த செவ்வாய் கிழமையன்று (நவம்பர் 21) மும்பையில் அனைத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் வரவழைக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் இந்த வருடம் ஏலம் விடுவது, வீரர்களை அணிகளில் தக்கவைத்துக்கொள்வது, வீரர்களுக்கான சம்பளம் ஆகியவை குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த வருடம் புதுமையாக மிட்-டிரான்ஸ்ஃபர் முறை பற்றியும் பேசியிருக்கிறார்கள்.

மிட் -டிரான்ஸ்ஃபர் முறையானது, ஒரு அணியால் ஏலம் பெறப்பட்ட வீரர் ஒரு சீசனில் பாதிப் போட்டிக்கு மேல் ஏலம் பெறப்பட்ட அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தால், அவரின் மீது ஆர்வம் காட்டும் மற்ற அணிகள் அவரை ஏலம் பெற முயற்சிக்கலாம். சீசனின் இடையே இந்த டிரான்ஸ்ஃபர் நடைபெறும். இதனை அனைத்து அணி உரிமையாளர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வரும் ஐபிஎல் தொடரிலிருந்தே இந்த முறை பின்பற்றப்படும்.

சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காகச் சென்னை, ராஜஸ்தான் அணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தடைக் காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் சென்னை, ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளும் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாயின.

சென்னை, ராஜஸ்தான் அணியில் விளையாடிய வீரர்கள் பெரும்பாலும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளில் விளையாடிவருகின்றனர். இவ்விரு அணிகளும் நீக்கம் செய்யப்பட்டு அவ்வணிகளின் வீரர்கள் ஏலம் விடப்படுவர். ஆனால் சென்னை அணியில் இருந்த அனைத்து வீரர்களும் மீண்டும் சென்னை அணிக்குத் திரும்புவது கேள்விக்குறியாக உள்ளது. செவ்வாய் அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் முடிவுக்கு வந்ததும் செய்தியாளர்களை சந்தித்த ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா இன்னும் ஓரிரு வாரங்களில் முழு விவரங்களும் வெளியாகும் என்று தெரிவித்தார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon