மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

அடுத்த வாரம் தென்மாவட்டங்களில் கனமழை!

 அடுத்த வாரம் தென்மாவட்டங்களில் கனமழை!

அடுத்த வாரம் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது முதல் பத்து நாட்களுக்கும் மேல் கனமழை பெய்தது. கடந்த ஒரு வார காலமாக மழை பெய்யாத நிலையில், அடுத்த வாரம் மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறும்போது, “குமரிக் கடல் முதல் கோவளம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் மெதுவாக நகர்ந்துவருகிறது. இது எந்தத் திசையில் செல்லும் என்பதைத் தற்போது கணிக்க முடியாது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. இரண்டு நாட்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.

மேலும் தமிழகத்தில் நாளையும் நாளை மறுநாளும் (நவம்பர் 24, 25) மிதமான மழை பெய்யலாம். வட மாவட்டங்களை விடத் தென் மாவட்டங்களில் தான் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த வாரம் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்றார்.

சென்னையைப் பொறுத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில இடங்களில் மிதமாக மழை பெய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு, பாபநாசம் 11 செ.மீ., சங்கரன்கோவில், கோவில்பட்டி, அம்பாசமுத்திரம், கொடைக் கானல், தொழுதூர், சிவகாசி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சேரன் மகாதேவி, தாமரைப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ., காங் கேயம், திண்டுக்கல், கந்தர்வகோட்டை, மங்களாபுரம், திருக்கோவிலூர், நாகப்பட்டினம், விருத்தாசலம், மானா மதுரை, கிராண்ட் அணைக்கட்டு, தர்மபுரி, கழுகுமலை, கோவில்பட்டி, ஊத்தங்கரை, திருக்காட்டுப்பள்ளி, ராசிபுரம், மணிமுத்தாறு, திருச்சி விமான நிலையம், தர்மபுரி ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon