மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

நடுக்கடலில் மீனவர்களிடம் கொள்ளை!

 நடுக்கடலில் மீனவர்களிடம் கொள்ளை!

மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வரும் நிலையில் இன்று நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது மீனவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான மீன்களையும், வலைகளையும் மர்ம நபர்கள் சிலர் பறித்துச் சென்றுள்ளனர்.

நாகை மாவட்டம் நாகூரைச் சேர்ந்த மீனவர்கள் ரவி, மூர்த்தி, செல்வகுமார் ஆகிய 3 பேர் நேற்று மீன் பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். இன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென் கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் மீனவர்களின் படகை சுற்றி வளைத்து அவர்கள் வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான மீன்களையும், மீன் பிடி வலைகளையும் பறித்துள்ளனர். பின் அங்கிருந்து மீனவர்களையும் விரட்டியடித்துள்ளனர். காலை 9 மணியளவில் கரைக்கு திரும்பிய மீனவர்கள் இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கடலோர காவல்படையிடம் புகார் அளித்துள்ளனர். எங்களைச் சுற்றி வளைத்து வலைகளைப் பறித்து சென்றது கொள்ளையர்களா ? அல்லது இலங்கை கடற்படையினரா? என்று தெரியவில்லை. எங்களை மிரட்டியதும் உயிருக்குப் பயந்து கரைக்குத் திரும்பினோம் என்று கூறினர்.

கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும்போதெல்லாம் ஏதோ ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். கடந்த 15ஆம் தேதி 10 மீனவர்களும், 17ஆம் தேதி 10 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களால் எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

எனவே மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon