மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

பாவம் செய்தால் புற்றுநோய் வரும்: அமைச்சர்!

 பாவம் செய்தால் புற்றுநோய் வரும்: அமைச்சர்!

பாவம் செய்தவர்களுக்குப் புற்றுநோய் வரும் என்று அசாம் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அசாமின் தலைநகரம் கவுஹாத்தியில் கடந்த 21ஆம் தேதி ஆசிரியர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சரும் அம்மாநில பாஜக தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா அதில் கலந்துகொண்டார். அப்போது முன்வினைப் பயன் குறித்துப் பேசிய அவர், “நாம் பாவம் செய்தால் கடவுள் நம்மை வேதனை அடையச் செய்கிறார். இளம் வயதுடையவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதையும், விபத்தில் சிக்குவதையும் நாம் பார்த்திருப்போம், அவர்களின் கடந்த காலத்தை ஆய்வு செய்தால், அவர்கள் செய்த பாவத்திற்கான தண்டனையாகவே அது அமைந்திருக்கும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. செய்த பாவங்களுக்கு நாம் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

மேலும், "வாழ்நாளில் அல்லது நமது முந்தைய வாழ்க்கையில் அந்த இளைஞன் எதுவும் செய்யவில்லை என்றாலும் அவரது தந்தை அல்லது தாய் ஏதோ தவறு செய்திருந்தார் என்றாலும் யாரும் தெய்வீக நீதியிலிருந்து தப்பிக்க முடியாது” என்று பேசிய அவர், வாழும் காலத்திலோ, முற்பிறவியிலோ செய்த பாவத்தின் காரணமாகத்தான் புற்றுநோய், திடீர் விபத்துகளால் மரணம் ஆகியவை நிகழ்வதாகவும் சொன்னார். அவரது இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அசாம் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான டிபப்ராட்டா சைக்கியா, அமைச்சரின் இந்தப் பேச்சு சொரணையற்றதாக உள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை காயப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரமும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பேச்சை விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon