மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

மாநிலம் மாறிச் சென்ற ரயில்!

 மாநிலம் மாறிச் சென்ற ரயில்!

மகாராஷ்டிர மாநிலம் செல்ல வேண்டிய சிறப்பு ரயில் நேற்று (நவம்பர் 22) மத்தியப் பிரதேசம் சென்றடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் விவசாயக் கடன், பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் நவம்பர் 20ஆம் தேதி போராட்டம் நடத்தினர். மகாராஷ்டிர மாநிலம், கோல்ஹாபூரைச் சேர்ந்த, 200 பெண்கள் உட்பட 1,494 விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்திற்குப் பின், 1,494 பேரும் சொந்த ஊர் திரும்ப 39 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, சிறப்பு ரயிலை முன்பதிவு செய்திருந்தனர்.

நவம்பர் 21ஆம் தேதி இரவு, டெல்லியில் இருந்து புறப்பட்ட சுவாபிமானி விரைவு ரயில், மதுராவில் இருந்து கோட்டா, மும்பை, புனே வழியாக கோல்ஹாபூர் செல்ல வேண்டும். ஆனால், மதுராவில் இருந்து ஆக்ரா, குவாலியர் வழியாக, தவறான வழியில், மத்தியப் பிரதேச மாநிலம், முரைனா மாவட்டம், பன்மோர் ரயில் நிலையத்திற்குச் சென்று சேர்ந்தது. இரவு தூங்க சென்ற விவசாயிகள் மறுநாள்

(நவம்பர் 22) காலை 6 மணி அளவில் எழுந்தபோது பன்மோர் ரயில் நிலையத்தில் இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். மகாராஷ்டிர மாநிலத்திற்குப் பதிலாக, மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு 160 கி.மீ. தவறான பாதையில் ரயில் சென்றுள்ளது. எனவே, விவசாயிகள் ரயில் நிலையத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சரக்கு ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகள் விவசாயிகளைச் சமாதானம் செய்து மாற்று ரயிலுக்கு ஏற்பாடு செய்தனர். அதைத் தொடர்ந்து, அந்த ரயில் இன்று (நவம்பர் 23) காலை கொஹல்பூர் சென்றடைந்தது.

இந்தச் சம்பவம் குறித்து ரயில் ஓட்டுநரிடம் விசாரித்தபோது, மதுராவில் சிக்னல் கிடைத்த வழியில் வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon