மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத் திருவிழா!

கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத் திருவிழா!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று (நவம்பர் 23) தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று தொடங்கிய தீபத் திருவிழாவைத் தொடர்ந்து 10 நாட்கள் காலையிலும் இரவிலும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும். இறுதியாக டிசம்பர் 2ஆம் தேதி மாலை மகாதீபம் ஏற்றப்படும். முதல் நாள் நிகழ்வாக இன்று அதிகாலை 3 மணிக்கு, கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன் மற்றும் பஞ்ச உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

இதையடுத்து, கோயிலின் 3 ஆம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதுமுதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

24ஆம் தேதி காலை தங்க சூரிய பிறை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவில் இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர்.

25ஆம் தேதி காலை நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் சிம்ம வாகனம், வெள்ளி அன்ன வாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் ஊர்வலம் வருகின்றனர்.

26ஆம் தேதி காலை நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையாரும் ஊர்வலம் வருகின்றனர்.

27ஆம் தேதி காலை கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரr, இரவு பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் பவனி.

28ஆம் தேதி காலை வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் ஊர்வலம். இரவு வெள்ளித் தேரோட்டம் நடைபெறும்.

29ஆம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும்.

30ஆம் தேதி காலை குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும், மாலை பிச்சாண்டவர் உற்சவமும், இரவு குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் வருகின்றனர்.

டிசம்பர் 1ஆம் தேதி காலை உற்சவத்தில் புருஷாமுனி வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் கைலாச, காமதேனு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகளும் ஊர்வலம் வருகின்றனர்.

டிசம்பர் 2ஆம் தேதி 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

இந்த திருவிழாவையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிர்க்க திருநெல்வேலி,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்குச் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. டிசம்பர் 3 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 10 திருக்குடைகளையும்,8 அலங்கார சுருட்டிகளையும் சென்னை க.பல்லாவரம் அருணாச்சலா ஆன்மிக சேவா சங்கத்தினர் நேற்று (நவம்பர் 22) வழங்கினர்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon