மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

கந்து வட்டி: தமிழ்த் திரையுலகைக் காக்க வேண்டும்!

 கந்து வட்டி: தமிழ்த் திரையுலகைக் காக்க வேண்டும்!

கந்து வட்டி என்ற வில்லனின் பிடியிலிருந்து தமிழ்த் திரையுலகைக் காக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (நவம்பர் 23) வெளியிட்டுள்ள அறிக்கையில், "திரைப்படத் தயாரிப்புக்காக அன்புச் செழியன் என்ற கந்து வட்டிக்காரரிடம் கடன் வாங்கி, அவர் அவமானப் படுத்தியாகக் கூறி அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. வெளியில் பிரகாசமாகத் தெரியும் திரையுலகில், அதிர்ச்சிகரமான இருட்டு நிகழ்வுகளுக்கு இது உதாரணமாகும்.

தமிழ் திரைத்துறைக்கு ஆகச்சிறந்த வில்லன் கந்து வட்டிதான். 2003ஆம் ஆண்டில் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த ஜி.வி. என்ற தயாரிப்பாளர் கந்து வட்டிக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். தற்போது அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த இடைப்பட்ட 15 ஆண்டுக் காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஜி.வி. தற்கொலைக்கும் இதே அன்புச்செழியன் தான் காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் அவர்மீது ஒரு வழக்கு கூட பதியவில்லை என்று கூறப்படுகிறது. இப்போதுகூட அவர் மீது மிகச் சாதாரண வழக்குதான் பதியப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் ஒருவரின் தலையீடு இருப்பது தான் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அந்த அமைச்சரின் கருப்புப் பணத்தை தான் அன்புச்செழியன் திரைத் துறையில் முதலீடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கந்து வட்டி என்ற வில்லனின் பிடியிலிருந்து தமிழ்த் திரையுலகை மீட்க வேண்டும். அசோக்குமாரின் தற்கொலைக்குக் காரணமான அன்புச்செழியனை கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தரவும், அவரது கடந்த கால அட்டகாசங்கள் குறித்து விசாரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon